இசுலாமிய மதகுரு படுகொலையை அடுத்து கென்யாவில் கலவரம்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், ஆகத்து 29, 2012

கென்யாவில் அடிப்படைவாத இசுலாமிய மதகுரு ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கென்யாவின் இரண்டாவது நகரமான மெம்போசாவில் இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டனர்.


காவல்துறையினர் மீது கிரனேட் வீசப்பட்டதில் மூன்று காவல்துறையினர் உயிரிழந்தனர். மேலும் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டார். இரண்டு நாள் கலவரங்களை அடுத்து மொம்பாசாவில் தற்போது காவல்துறையினர் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மதகுரு அபூட் ரோகோ முகம்மது என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இவர் சோமாலியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு உதவுபவர் என ஐக்கிய நாடுகளும் அமெரிக்காவும் இவர் மீது குற்றம் சுமத்தியிருந்தன.


மதகுரு கொல்லப்பட்டதை அடுத்து கோபம் கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் கடைகளுக்குத் தீ வைத்தும், கிறித்தவக் கோயில்களைத் தாக்கியும் வருகின்றனர்.


அல்-சபாப் தீவிரவாதிகளே இளைஞர்களுக்கிடையே தமக்கு ஆதரவைப் பெருக்க மதகுருவைக் கொலை செய்ததாக காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மதகுரு ரோகோ மீது ஐநா பாதுகாப்புச் சபை பயணத் தடை விதித்து, அவரது சொத்துக்களையும் முடக்கி வைப்பதாகக் கடந்த மாதம் அறிவித்திருந்தது.


மூலம்

தொகு