இசுலாமியருக்கு எதிரான திரைப்படம் தயாரித்தவர் அமெரிக்காவில் கைது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, செப்டெம்பர் 28, 2012

உலகெங்கும் மதக் கலவரத்தைத் தூண்டி விட்ட இனசென்சு ஒவ் முசுலிம்சு என்ற திரைப்படத்தைத் தயாரித்த நபர் கலிபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலசில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இவரைப் பிணையில் விடுதலை செய்வதற்கு நீதிபதி மறுத்துள்ளார்.


நக்கூலா பசெலி நக்கூலா என்ற 55 அகவையுடைய நபரே கைது செய்யப்பட்டவர் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டில் வங்கி முறைகேடு வழக்கு ஒன்றில் கைதாகிப் பின்னர் நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டார். நன்னடத்தையை மீறியதாலேயே இவருக்குத் தற்போது பிணை வழங்கப்படவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.


எகிபதைப் பிறப்பிடமாகக் கொண்ட கிறித்தவரான நக்கூலா இனசென்சு ஒவ் முசுலிம்சு என்ற திரைப்படத்தின் 14 -நிமிட முன்னோட்டம் ஒன்றைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இக்காணொளி வெளிவந்த பின்னர் இவர் தலைமறைவானார்.


2011 இல் இவருக்கு 21 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் கணினிகள் பாவிப்பது, இணையத்தை ஐந்து ஆண்டுகளுக்கு அதிகாரி ஒருவரின் அனுமதியின்றிப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.


"இவர் மீது தற்போது இந்த நீதிமன்றத்திற்கு நம்பிக்கை இல்லை," என அமெரிக்க மத்திய மாவட்ட உயர் நீதிமன்ற தீதிபதி சூசன் சேகல் தெரிவித்தார்.


இறைத்தூதர் முகமது நபியை நையாண்டி செய்யும் விதமாக இந்தத் திரைப்படம் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து உலகெங்கும் உள்ள முசுலிம் மக்கள் திரண்டெழுத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் படுகொலை செய்யப்பட்டார்.


இந்த காணொளி அமெரிக்க விதிகள் எதையும் மீறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இக்காணொளியை யூடியூபில் இருந்து அகற்றுமாறு ஒபாமா நிருவாகம் கூகுள் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்ட போதிலும் அதனை ஏற்க கூகுள் மறுத்து விட்டது. தமது விதிகளை எவ்விதத்திலும் அக்காணொளி மீறவில்லை என அது தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் சிலர், இயக்குனர் தம்மைத் தவறாக வழிநடத்தியதாகத் தெரிவித்துள்ளனர். தாம் திரைப்படத்தில் நடிக்கும் போது அது இசுலாமுக்கு எதிரானதாகவோ, அல்லது நபிக்கு எதிராகவோ இருப்பதாகத் தாம் உணரவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.


மூலம்

தொகு