ஆழ்கடல் நிலநடுக்கத்தை அடுத்து சொலமன் தீவுகளை ஆழிப்பேரலை தாக்கியது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், பெப்பிரவரி 6, 2013

சொலமன் தீவுகளில் இருந்து ஏனைய செய்திகள்
சொலமன் தீவுகளின் அமைவிடம்

சொலமன் தீவுகளின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

ஆழ்கடல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பசிபிக்கின் சொலமன் தீவுகளைத் தாக்கியதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர், பல வீடுகள் சேதமடைந்தன.


8.0 அளவு நிலநடுக்கம் இன்று 01:12 ஜிஎம்டி மணிக்கு சாண்டா குரூசு தீவுகளுக்கு அருகில் பதிவானதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து இத்தீவுகளில் கிழக்குப் பகுதியில் உள்ள லாட்டா என்ற தீவை 0.9 மீ உயர சுனாமி அலைகள் தாக்கின. தீவின் விமான நிலையம் சேதமடைந்தது. லாட்டாவின் மேற்குப் பகுதியில் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உட்புகுந்துள்ளது. மூன்று கிராமங்கள் நீரில் ஆழ்ந்துள்ளன.


நிலநடுக்கத்தை அடுத்து பல பசிபிக் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது, ஆனாலும் இரண்டு மணி நேரத்தின் பின்னர் இந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.


சொலமன் தீவுகளில் ஒன்றான சாண்டா குரூசுத் தீவுத் தொடரில் லாட்டா (அல்லது நெண்டோ) மிகப் பெரிய தீவு நகரமாகும். மேற்குக் கரைப் பகுதியில் 1.5மீ உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கின. இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம் என லாட்டா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


சொலமன் தீவுகள், வனுவாட்டு, நவூரு, பப்புவா நியூ கினி, துவாலு, நியூ கலிடோனியா, கோசுரே, பிஜி, கிரிபட்டி, வலிசு புட்டூனா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுப், பின்னர் நீக்கப்பட்டன.


இப்பகுதியில் அண்மைக்காலங்களில் சில நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன. சொலமன் தீவுகள் எரிமலை வளையம் எனப்படும் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம், மற்றும் எரிமலைக் கொந்தளிப்பு இடம்பெறுகிறது.


2007 ஆம் ஆண்டில் 8.1 அளவு நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தியதில் 52 பேர் வரையில் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.


மூலம்

தொகு