ஆறு கோள்களைக் கொண்ட புறக்கோள் தொகுதி ஒன்றை நாசா வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், பெப்பிரவரி 3, 2011

பூமியில் இருந்து ஏறத்தாழ 2,000 ஒளியாண்டுகள் தூரத்தில் கெப்லர்-11 என்ற சூரியனை ஒத்த விண்மீன் ஒன்றைச் சுற்றி வரும் ஆறு புறக்கோள்களை நாசாவின் கெப்லர் திட்ட வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


கெப்லர்-11 என்ற சூரியனைச் சுற்றி ஆறு கோள்கள் வலம் வருகின்றன. படம்: நாசா
கெப்லர்-11 தொகுதியுடன் எமது சூரியத் தொகுதி ஒப்பீடு, படம்: நாசா

இந்த ஆறு கோள்களும் பூமியை விட இரண்டு முதல் நாலரை மடங்கு ஆரையையும், இரண்டு முதல் 13 மடங்கு வரை திணிவையும் கொண்டுள்ளன. இவற்றில் ஐந்து கோள்கள் எமது சூரியனை புதன் கோள் சுற்றி வருவதைவிட குறைந்தளவு தூரத்தில் தமது சூரியனைச் சுற்றி வருகின்றன.


இந்தக் கண்டுபிடிப்புகள் பற்றிய விவரங்கள் செவ்வாய்க்கிழமை நேச்சர் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. “கெப்லர்-11 என்பது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பான கோளமைப்பு ஆகும். இதன் அமைப்பு மூலம் இது தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்,” கெப்லர் திட்ட ஆய்வாளர் ஜாக் லிசாவர் தெரிவித்தார். “இந்த ஆறு புறக்கோள்களும் பாறைகளையும் வாயுக்களையும் கொண்ட ஒரு கலவைகள். நீரையும் இவை கொண்டிருக்கலாம்,” என அவர் தெரிவித்தார்.


கெப்லர் திட்டம் கண்டுபிடித்த மேலும் 1,235 புதிய கோள்களாகக் கணிக்கப்படக்கூடிய வான் பொருட்களைப் பற்றிய தகவல்களும் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இக்கண்டுபிடிப்புகள் அனைத்தும் 2009 ஆம் ஆண்டு மே 12 முதல் செப்டம்பர் 17 வரை கெப்லர் திட்டத்தால் அவதானிக்கப்பட்ட 156,000 விண்மீன்கள் பற்றிய தகவல்கள் மூலம் உய்த்தறியப்பட்டுள்ளது.


கெப்லர் திட்டத்தின் மூலம் ஏற்கனவே கெப்லர்-9 என்ற முன்று கோள்களைக் கொண்ட தொகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனை விட கடந்த மாதத்தில் கெப்லர்-10பி என்ற பாறைகளைக் கொண்ட புறக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்திருந்தது.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு