அல்-கைதா இயக்கத்தின் முக்கிய தலைவர் அல்-அவ்லாகி கொல்லப்பட்டார்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

சனி, அக்டோபர் 1, 2011

அல் கைதா இயக்கத்தின் முக்கிய தலைவர் அன்வர் அல் அவ்லாகி ஏமனில் இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிரிழந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏமன் அரசும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.


அன்வர் அல்-அவ்லாகி

அமெரிக்காவில் பிறந்தவரான அவ்லாகி (அகவை 40) தனது ஆங்கிலப் புலமையாலும், கணினி அறிவினாலும் அல்-கைதா இயக்கத்தின் பிரச்சார நடவடிக்கைகளின் தூணாக விளங்கினார். அவ்வியக்கத்தின் மிக உறுதியான பிரிவாகக் கருதப்படும் ஏமன் நாட்டு பிரிவின் தலைவரான இவர் இயக்கத்தில் ஆட்களை இணைப்பதிலும் முன்னின்று செயற்பட்டவராவார். அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் சிலவற்றிலும் தொடர்புபட்டுள்ள இவர் அந்நாட்டினால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாகவும் கருதப்படுகின்றார்.


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இவரை சுட்டுக் கொல்லும்படி தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டுள்ளார். அவ்லாகியுடன் சேர்ந்து சமீர் கான் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார். இவரும் அமெரிக்காவில் பிறந்தவர் ஆவார்.


ஏமனின் தலைநகர் சனாவில் இருந்து 90 மைல் கிழக்கே நேற்றைய தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதல் பற்றிக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா, "அல்-கைதா இயக்கத்துக்கு இது ஒரு பெரும் பின்னடைவு, ஆனாலும் அவ்வியக்கம் இப்பிராந்தியத்தில் அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இன்னமும் உள்ளது," என்றார்.


கடந்த டிசம்பர் மாதத்தில் அவ்லாக்கி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் இவர் 30 போராளிகள் வரை கொல்லப்பட்டனர், ஆனால் அவ்லாக்கி உயிர் தப்பினார். ஒசாமா பின் லாதின் கொல்லப்பட்டதன் பின்னர் அமெரிக்காவின் தேடுதல் பட்டியலில் அவ்லாக்கி முதலாமிடத்தில் இருந்தார்.


மூலம்

தொகு