அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியினை ஆதரிக்கும் பரப்புரை தமிழகத்தில் துவக்கம்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், சூன் 3, 2014

அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான மாநிலந் தழுவிய பரப்புரை இயக்கம் கடந்த ஞாயிறன்று சென்னையில் தொடங்கியது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் பரப்புரையை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே. வசந்தி தேவி முரசறைந்து தொடங்கி வைத்தார்.


தனியார் பள்ளிகளில்தான் தரமான கல்வி வழங்கப்படுகிறது என்பது ஒரு மூட நம்பிக்கையே; 93 விழுக்காடு தனியார் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லை என்பதே உண்மை நிலை என்றார் அவர். ஏழைகளுக்கானது என்றால் தரமற்றது என்ற எண்ணம் பரப்பப்பட்டுள்ளது. மத்திய - மாநில அரசுகளும் அந்த எண்ணத்தை வலுப்படுத்துவது போல் செயல்படுகின்றன என்று அவர் விமர்சித்தார். தாய் மொழி வழி கற்றவர்கள்தான் உலகின் அனைத்து நாடுகளிலும் அனைத்துத்துறைகளிலும் முன்னணியில் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். “மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுப்பள்ளிகளின் மூலம் கட்டணமின்றி தரமான கல்வியைத் தங்களது குழந்தைகளுக்கு வழங்கக் கோருவது பெற்றோரின் உரிமை; அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தி பொதுப் பள்ளிகளை வலுப்படுத்துவது அரசின் கடமை” எனும் முழக்கம் முன்வைக்கப்பட்டது.


பிரச்சார இயக்கத்தை வாழ்த்திப் பேசிய மூத்த கல்வியாளர் எஸ். எஸ். ராஜகோபாலன், அரசும் கல்வித்துறையும் செய்ய வேண்டிய பணியை அறிவியல் இயக்கம் மேற்கொண்டிருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் முறைப்படி பயிற்சி பெற்றவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால் தனியார் பள்ளிகளின் 70 விழுக்காடு ஆசிரியர்கள் பயிற்சி பெறாதவர்களாக, தற்காலிகமாக நியமிக்கப்பட்டு சொற்ப ஊதியத்திற்கு வேலை வாங்கப்படுகிறவர்களாக இருக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். பாகுபாடுகளுடன் குழந்தைகள் வளர்க்கப்படுவது சமுதாய வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்றார் அவர். அறிவியல் இயக்க முன்னாள் மாநிலத் தலைவரும் சமச்சீர் கல்விக்காக வாதாடியவருமான பேராசிரியர் ச. மாடசாமி, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பணம், சாதி என நுட்பமான பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றார்.


உடன்பிறந்தவர்களான இரண்டு சிறுமிகள் மேல் படிப்புக்குப் போகமுடியாது என்பதால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது நாட்டிற்கே பெரும் இழுக்கு என்றார் அவர். அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் என். மணி, ஒரு வகுப்புக்கு ஒரு வகுப்பறை, ஒரு வகுப்பறைக்கு ஒரு ஆசிரியர் என்பதை உத்தரவாதப்படுத்துவது அரசின் பொறுப்பு என்றார். பல தனியார் பள்ளிகளில் பயிற்சி பெறாதவர்கள், சொற்ப ஊதியத்தில் வேலை வாங்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நிறைவுரையாற்றிய தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, “சமம்” என்ற வார்த்தையே தவறானது என்ற கருத்து திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டிருக்கிறது என்றார். தனியார் பள்ளிகளின் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் எதுவும் சொல்லாதவர்கள், பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிகமான அளவுக்கு எளிய குடும்பங்களின் குழந்தைகள் முதல் நிலை மதிப்பெண்கள் எடுக்கிறபோது அது எப்படி என்றும் மதிப்பெண்களில் தாராளம் காட்டப்பட்டதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.


தமுஎகச சார்பில் கவிஞர் நா. வே. அருள், தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கத்தின் தலைவர் இறை எழிலன், பேராசிரியர் ரவிக்குமார், மாணவர் - பெற்றோர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அருமை நாதன், பத்திரிகையாளர் அ.குமரேசன், அறிவியல் இயக்கத்தின் சக்தி வேல், மொழிபெயர்ப்பாளர் நலங்கிள்ளி உள்ளிட்டோரும் உரையாற்றினர். அறிவியல் இயக்க நிர்வாகிகளில் ஒருவரான உதயன் தொகுத்தளித்தார். குணா ஜோதிபாசு வரவேற்றார், கதிரவன் நன்றி கூறினார். சென்னை தியாகராய நகர், தர்மாபுரம் சாலைப் பகுதியையொட்டிய தெருக்களுக்குப் பிரச்சாரக் குழுக்கள் சென்றன.


அரசுப்பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுக்கு மாநில - தேசிய அளவிலான அறிவியல் மாநாடுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புக் கிடைப்பதால் இயல்பாக அவர்கள் சமுதாயப் பங்கேற்போடு வளர முடிகிறது என்றும், பெரும்பாலான தனியார் பள்ளிகளிலோ அதிக மதிப்பெண் வாங்குவதே வெற்றி என்று மாணவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் வீடு வீடாகச் சென்று எடுத்துரைக்கப்பட்டது.

மூலம்

தொகு