அமெரிக்க இராசாங்கத் திணைக்களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், அக்டோபர் 27, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூடமைப்புப் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்கத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வாசிங்டனில் அதிகாரபூர்வமாக ஆரம்பமானது.


அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து புறப்பட்ட கூட்டமைப்புக் குழுவில் இரா. சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் அடங்கியிருந்தனர்.


அமெரிக்க உயர்அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு நேற்று அமெரிக்க நேரப்படி சரியாகக் காலை 9.30 மணிக்கு இராஜாங்கத் திணைக்களத்தில் ஆரம்பமாகியதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன. அவர்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைச்செயலர் ரொபேர்ட் ஓ பிளேக்கை நேற்றுச் சந்தித்ததாக உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


கூட்டமைப்பினர் இந்த விஜயத்தின்போது ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், அமெரிக்க வெளியுறவுச் செயலர் இலாரி கிளிண்டன் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழர்களின் சனநாயகத் தலைமையுடன் பேச்சுக்களை அமெரிக்கா மேற்கொள்வது குறித்து இலங்கை கடும் கண்டனத்தை வெளியிட்ட போதும் அமெரிக்கா அதனை கருத்திற் கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க விஜயமானது அவர்களின் ஜனநாயக உரிமையாகும் என்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.


மூலம்

தொகு