அமெரிக்க அரசு இணையதளத்தில் இந்தியாவின் திருத்தப்பட்ட வரைபடம் வெளியிடப்பட்டது

வெள்ளி, சனவரி 6, 2012

அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை இணையதளத்தில் இந்தியாவின் திருத்தப்பட்ட புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இத் தளத்தில் அனைத்து நாடுகளுக்கான எல்லைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.


முன்னர் வெளியிடப்பட்ட வரைபடத்தில் இந்தியாவின் எல்லையை குறிக்கும் வரைபடத்தில் காஷ்மீர் பகுதி நீக்கப்பட்டு அவை பாக்கித்தானுடன் இணைந்திருப்பதாக ‌வெளியிடப்பட்டது. பாக்கித்தான் நாட்டின் வரைபடத்தில் காஷ்மீர் பகுதி இணைந்திருப்பதை போன்று வெளியிடப்பட்டிருந்தது.


இதனையடுத்து இந்தியா முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனை நீக்கவேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தவறான வரைபடம் அந்த இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டதுடன் திருத்தப்பட்ட புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தவறான வரைபடம் வெளியிட்டதற்கு வருத்தமும் தெரிவித்துள்ளது.


இது குறித்து அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியுலான்ட் செய்தியாளர்களிடம் கூறிய போது, அமெரிக்க இணையதளத்திலும், பயணம் தொடர்பான அனைத்து தகவல் மையங்களுக்கும் சரி செய்யப்பட்ட வரைபடம் அனுப்பப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார். 1972 ம் ஆண்டு நடைமுறையில் இருந்த இந்திய வரைபடத்தினை அடிப்படையாக கொண்டே பழைய வரைபடம் வெளியிடப்பட்டதாக கூறிய அவர், இந்தியாவின் ஆட்சேபத்தை அடுத்து உடனடியாக சரியான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


மூலம் தொகு