அமெரிக்காவில் வரவு செலவுத் திட்டம் நிறைவேறாததை அடுத்து அரசுப் பணிமனைகள் முடங்கின

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், அக்டோபர் 2, 2013

அமெரிக்காவில் புதிய நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை வழங்குவதில் காங்கிரசின் இரு அவைகளிலும் இணக்கப்பாடு ஏற்படாததால் பகுதி அளவான அரச நிறுவனங்களை மூட வெள்ளை மாளிகை நேற்று உத்தரவிட்டது.


இந்த உத்தரவின் படி, நேற்று நள்ளிரவுடன் பல்வேறு அரச சேவைகளும் மூடப்பட்டதோடு, 700,000 இற்கும் அதிகமான நடுவண் அரசு ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. தேசியப் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், உட்படப் பல அவசியமற்ற சேவைகள் மூடப்பட்டுள்ளன. ஓய்வூதியம், மற்றும் போர்க்கால நல்கைகளுக்கான காசோலைகள் வழங்குவது, கடவுச்சீட்டு, மற்றும் விசா வழங்கல் ஆகியவை தாமதப்படுத்தப்பட்டுளன. ஆனாலும், இராணுவத்தினருக்கான ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆளும் சனநாயக கட்சியின் வரவு-செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை கீழவையில் நிறைவேற்ற வேண்டுமானால் அரசுத்தலைவர் பராக் ஒபாமா அறிவித்திருக்கும் ஒபாமாகேர் என அழைக்கப்படும் மருத்துவ காப்பீட்டு சீர்திருத்தத் திட்டத்தை தாமதப்படுத்த வேண்டும் என குடியரசு கட்சி நிபந்தனை விதித்துள்ளது. இந்நிலையிலேயே திங்கட்கிழமை நள்ளிரவு வரை இது தொடர்பில் இணக்கம் ஏற்படாததால் நிதி ஒதுக்கீடு தோல்வி யடைந்துள்ளது.


அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "ஒரு கட்சியில் உள்ள சிலரே இதற்குக் காரணம், ஏனென்றால் அவர்கள் ஒரு சட்டமூலத்தை விரும்பவில்லை," என்றார். இந்த விவகாரத்தை அடுத்து பராக் ஒபாமா தனது ஏற்கனவே திட்டமிடப்பட்ட மலேசிய, பிலிப்பீன்சு அரசு முறைப் பயணத்தை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார்.


முன்னதாக 1995 – 1996 ஆம் ஆண்டுகளில் அப்போதைய பில் கிளின்டன் ஆட்சியில் எதிர்க் கட்சியினர் இதேபோன்று அரசை முடக்கியிருந்தனர். 21 நாட்கள் நீடித்த இந்த முடக்கம் எதிர்க் கட்சியினரின் கோரிக்கைக்கு பில் கிளின்டன் இணங்கியதையடுத்தே முடிவுக்கு வந்தது.


மூலம்

தொகு