அமெரிக்காவில் இலங்கைத் தலைவர் ராசபக்சவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், மார்ச்சு 1, 2012

இலங்கையில் நான்காம் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.


இறுதிப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக அமெரிக்கா வாழ் தமிழர்கள் இந்த வழக்கினை தொடுத்திருந்தனர்.


"நாட்டின் தலைவர் என்னும் சிறப்புரிமையின்படி அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுக்கு சட்டவிலக்கு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அலுவலகம் அறிவித்துள்ளது," என தனது தீர்ப்பில் அமெரிக்க மாவட்ட நீதிபதி கொலீன் கொல்லர்-கொட்டெல்லி கூறினார். இருந்தபோதிலும், இதனை நாம் மிக இலகுவாக எடுக்க முடியாது எனக் கூறிய நீதிபதி, மனித உரிமைகள் அங்கு மீறப்பட்டமை அதிர்ச்சியைத் தருகிறது என்றார்.


மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இறுதிக்கட்டத்திலேயே இடம்பெற்றது. வாசிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.


"இரண்டு நூற்றாண்டுகளாக அமெரிக்காவில் உள்ள சட்டமூலங்கள் காரணமாக இவ்வழக்கை இப்போது மேலே கொண்டு செல்லமுடியாதுள்ளது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.


திருகோணமலையில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 4 மாணவர்களின் உறவினர்கள், மற்றும் 2006 ஆம் ஆண்டில் மூதூரில் கொலைசெய்யப்பட்ட 14 பிரெஞ்சுத் தொண்டு நிறுவனப் பணியாளர்களின் உறவினர்கள், மற்றும் 2009 ஆம் ஆண்டுப் போரில் கொல்லப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் கடந்த ஆண்டு சனவரியில் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.


முன்னாள் இராணுவத் தலைவர் சவேந்திர சில்வாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று இதே காரணங்களினால் சென்ற மாதம் அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது. இவர் தற்போது ஐநாவுக்கான இலங்கையின் உதவித் தூதுவராகப் பணியாற்றுகிறார்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு