அமெரிக்காவின் மேரிலாந்து மாநில சட்டமன்றம் மரணதண்டனை ஒழிப்புக்கு ஆதரவாக வாக்களிப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

சனி, மார்ச்சு 16, 2013

ஐக்கிய அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தின் கீழவை உறுப்பினர்கள் அம்மாநிலத்தில் மரணதண்டனையை இல்லாதொழிக்க பெரும்பான்மையாக ஆதரித்து வாக்களித்துள்ளனர். 82 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 56 பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.


இச்சட்டமூலம் மாநில ஆளுனர் மார்ட்டின் ஓ’மாலியின் கையெழுத்திற்கு அனுப்பப்பட்டு அதிகாரபூர்வமாகச் சட்டமாக்கப்படும்.


மாநில சனநாயகக் கட்சி ஆளுனர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மரணதண்டனை ஒழிப்புக்கு ஆதரவாகப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருபவர் ஆவார். இதனால், இது சட்டமாக்கப்படுவதில் எச்சிக்கலும் இராது என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


"மரண தண்டனையை நாம் இனப்பாகுபாடு இல்லாமல் நிருவகிக்க முடியாது, ஒருவரை ஆயுள் காலத்திற்கும் நன்னடத்தைக் கால விடுதலையின்றி அடைத்து வைத்திருப்பதிலும் பார்க்க மரணதண்டனையை நிறைவேற்றுவது செலவு அதிகம்," ஆளுனர் ஓ’மாலி அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "நிரபராதி ஒருவர் மரணதண்டனை பெற்றால், அவரை நாம் மீளக் கொண்டுவர முடியாது," எனக் கூறினார்.


மிகப் பாரதூரமான குற்றங்களை இழைப்பவர்களுக்கு மரணதண்டனை அவசியமான ஒன்று என இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

மரணதண்டனை ஒழிப்பு சட்டமாக்கப்படின், மரணதண்டனையை ஒழிக்கும் அமெரிக்காவின் 18வது மாநிலமாக மேரிலாந்து திகழவிருக்கிறது. 1638 ஆம் ஆண்டில் மேரிலாந்து பிரித்தானியக் குடியேற்ற நாடாக இருந்த போது அங்கு மரணதண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது. கடைசியாக அங்கு 2005 ஆம் ஆண்டில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.


கடந்த ஆண்டு அமெரிக்காவின் கனெடிகட் மாநிலம் மரணதண்டனையை இல்லாதொழித்தது.


மூலம்

தொகு