அணு உலைகளை முற்றாக மூடிவிட செருமனி முடிவு

திங்கள், மே 30, 2011

2022 ஆம் ஆண்டிற்குள் செருமனியில் உள்ள அனைத்து அணு உலைகளையும் மூடி விடுவதற்கு செருமனியின் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.


செருமனியில் கிராஃபென்ரைன்ஃபெல்ட் நகரில் உள்ள அணு உலை

நேற்றிரவு நடைபெற்ற பேச்சுக்களை அடுத்து சுற்றுச்சூழல் அமைச்சர் நோர்பர்ட் ரொட்சென் அரசின் இம்முடிவை அறிவித்தார்.


சப்பானில் சென்ற மார்ச் மாதத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தை அடுத்து புக்குசீமா அணு உலை விபத்துக்குள்ளானது. இவ்விபத்தை அடுத்து உலகெங்கும் அணு உலைகளைப் பயன்படுத்தும் நாடுகள் தமது அணு உலைகளின் பாதுகாப்புக் குறித்து விளிப்படைந்தன. செருமனியின் அரசுத்தலைவர் அங்கிலா மெர்க்கெல் நாட்டின் அணு உலைகள் குறித்து ஆராய்வதற்காக உயர் மட்டக் குழு ஒன்றை நியமித்திருந்தார்.


செருமனியின் பல பாகங்களிலும் அணு உலைகளை மூடி விடுமாறு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.


சப்பானிய அணு உலை விபத்தை அடுத்து செருமனியின் மிகப் பழமையான ஏழு அணு உலைகள் உடனடியாக மூடப்பட்டன. இவை மீண்டும் பாவிக்கப்பபட மாட்டா என ரொட்ச்சென் ஆறிவித்தார். வடக்கு செருமனியில் உள்ள எட்டாவது உலை தொழில் நுட்பக் கோளாறு காரணமாக மூடப்பட்டது. இது நிரந்தரமாகவெ மூடப்பட்டு விட்டதாக அவர் அறிவித்தார்.


மேலும் ஆறு அணு உலைகள் 2021 ஆம் ஆண்டில் மூடப்படும். அண்மையில் அமைக்கப்பட்ட மூன்று புதிய உலைகள் 2022 ஆம் ஆண்டில் மூடப்பட விருக்கிறது.


மூலம் தொகு