அடுத்த பயணத்துக்கான முன்னோடியாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது

வியாழன், அக்டோபர் 18, 2012

அக்டோபர் இறுதியில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு புதிய விண்வெளி வீரர்கள் செல்லவுள்ளதை ஒட்டி நிலையத்தின் சுற்றுப்பாதை ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்டதாக உருசியாவின் விண்வெளி நிலையத் திட்டப் பணிப்பகம் அறிவித்துள்ளது.


சுவெஸ்தா சேவைக் கலம். இதன் இடது பக்கத்தில் சோயுஸ் விண்கலமும், சாரியா கலம் வலப் பக்கத்திலும் காணப்படுகின்றன

உருசியாவின் சுவெஸ்தா சேவைக் கலம் இந்த மாற்றத்தை தனது அமுக்கிகள் மூலம் செயற்படுத்தியுள்ளது.


“விண்வெளி நிலையத்துக்கு 0.3 மீ/செ உந்துதல் கொடுப்பதற்காக சுவெஸ்தா அமுக்கிகள் 19 செக்கன்களுக்கு செயல்படுத்தப்பட்டன,” என திட்டத்தின் பேச்சாளர் கூறினார். இதன் மூலம் விண்வெளி நிலையத்தின் உயரம் ஒரு கிலோமீட்டர் உயர்ந்து 419.2 கிமீ ஆக அதிகரித்துள்ளது. விண்கலம் ஒன்று வெற்றிகரமாக விண்வெளி நிலையத்துடன் இணைய அல்லது விலக்க பூமியின் புவியீர்ப்புடன் ஈடு செய்வதற்காக பொதுவாக நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்படுவது வழக்கமாகும்.


அக்டோபர் 25 இல் சொயூசு டிஎம்ஏ-06எம் விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைவதற்கு வசதியாகவே சுற்றுப்பாதை உயரம் மாற்றப்பட்டுள்ளது. சோயுசு விண்கலத்தில் உருசிய வீரர்கள் அலேக் நொவீத்ஸ்கி, யெவ்கேனி தாரெக்கின், மற்றும் நாசாவைச் சேர்ந்த கெவின் ஃபோர்ட் ஆகியோர் செல்லவுள்ளனர். தற்போது விண்வெளி நிலையத்தில் உள்ள நாசாவின் சுனித்தா வில்லியம்சு, உருசியாவின் யூரி மாலென்சின்கோ, யப்பானின் அக்கிகிக்கோ ஓசிடே ஆகியோருடன் இந்த மூவரும் இணைவர்.


மூலம் தொகு