அங்கோலா தேர்தலில் ஆளும் மக்கள் விடுதலை இயக்கம் வெற்றி

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, செப்டெம்பர் 2, 2012

அங்கோலாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் 75 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஆளும் அங்கோலா மக்கள் விடுதலை இயக்கம் (MPLA) முன்னணியில் உள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான ஒற்றுமைக் கட்சி 18 வீத வாக்குகளைப் பெற்றுளதாக தேர்தல் ஆணியம் தெரிவித்திருக்கிறது.


அரசுத்தலைவர் ஒசே துவார்தோ சாண்டோசு

இம்முடிவுகளின் படி, 1979 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் அரசுத்தலைவர் ஒசே எதுவார்தோ டோசு சாண்டோசு (70) மீண்டும் ஒரு தடவை ஆட்சியில் அமர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சி பெரும்பாலானோரின் ஆதரவைப் பெற்றுள்ளதைத் தேர்தல் முடிவுகள் முடிவுகள் காட்டுவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


புதிய அரசியலமைப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறும் முதலாவது பொதுத்தேர்தல் இதுவாகும். புதிய அரசியலமைப்பின் படி, 220 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் வெற்றி பெறும் கட்சியின் தலைவர் அரசுத்தலைவராக (சனாதிபதியாக) அறிவிக்கப்படுவார்.


1975 ஆம் ஆண்டு அங்கோலா போர்த்துகலிடம் இருந்து விடுதலை பெற்ற நாளில் இருந்து அங்கோலா மக்கள் விடுதலை இயக்கம் அந்நாட்டில் ஆட்சியில் இருந்து வருகிறது. ஆப்பிரிக்காவின் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் அங்கோலா உள்ளது. 2002 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் அதன் பொருளாதாரம் பெருமளவு மேம்பட்டுள்ளதாயினும், அதன் வளம் ஒரு குறிப்பிட்ட சிலரையே அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.


மூலம்

தொகு