2010 இயற்பியல் நோபல் பரிசு இரண்டு இரசியர்களுக்கு அறிவிக்கப்பட்டது

This is the stable version, checked on 11 அக்டோபர் 2010. Template changes await review.

புதன், அக்டோபர் 6, 2010



அதிசயிக்கத்தக்க இயல்புகளைக் கொண்ட கரிமப் படலத் தாள்களை உருவாக்கியமைக்காக 2010 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு இரண்டு இயறிப்யலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


அந்திரே கெயிம்
கிரபீன் தாள்

கிரபீன் என்றழைக்கப்படும் இத்தாள்களின் ஆராய்ச்சிக்காக ஐக்கிய இராச்சியம், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆந்திரே கெயிம், கொன்ஸ்டண்டீன் நவசியோலொவ் ஆகியோர் கூட்டாக இப்பரிசைப் பெறுகின்றனர்.


கிரபீன் எனப்படுவது ஒரு அணு அளவு தடிப்பம் உள்ள மிக மெல்லிய கரிமத் தாளாகும். இது முழுக்க முழுக்க ஒளி புகத்தக்க தெளிந்த தாள் மட்டுமல்லாது மிகவும் உறுதியானதும் மின்னோட்டத்தைக் எளிதாகக் கடத்தும் தன்மையையும் கொண்டுள்ளது. இத்தகைய சிறப்பு இயல்புகளைக் கொண்டிருப்பதால் இவற்றின் பயன்களும் அளப்பரியதாகும்.


இவர்கள் இருவரும், வேறும் ஆய்வாளர்களின் உதவியுடன் முதன் முதலில் எழுத்தாணியில் பயன்படுத்தப்படும் கிரபைட்டில் இருந்து கரிமப் படலங்களை வேறுபடுத்தினார்கள்.


இக்கண்டுபிடிப்பு விரைவுக் கணினிகள் உட்பட இலத்திரனியலில் மேலும் பல கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என நோபல் பரிசு நிறுவனம் தெரிவித்துள்ளது.


51 வயதாகும் பேராசிரியர் கெயிம், 36 வயதாகும் நவசியோலொவ் இருவரும் இரசியாவில் பிறந்து அங்கேயே உயர்கல்வியைப் பெற்றவர்கள். கெயிம் நெதர்லாந்தில் குடியேறி அங்கு வசிக்கிறார். நவசியோலொவ் பிரித்தானிய, மற்றும் இரசிய இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளார்.


நோபல் பரிசு 10 மில்லியன் சுவீடிய குரோனர் ($1.5மி) பெறுமதியானதாகும்.

தொடர்புள்ள செய்திகள்


மூலம்