2009 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

திங்கள், அக்டோபர் 5, 2009:


மருத்துவத்துறைக்கான இவ்வாண்டு நோபல் பரிசு அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மூன்று அறிவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


நிறப்புரி (குரோமோசோம்கள்) குறித்த புதிய விடயங்களை ஆராய்ந்து கண்டறிந்தமைக்காக எலிசபெத் பிளாக்பர்ன், கரொல் கிரெய்டர், ஜாக் சோஸ்டாக் ஆகியோருக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.


உயிர்க்கலங்கள் உடைந்து புதிய உயிர்க்கலங்கள் உண்டாகும்போது குரோமோசோம்கள் மட்டும் எப்படி முழுமையாக பிரதி எடுக்கப்படுகின்றன, குரோமோசோம்கள் தரம்கெடாமல் பாதுகாக்கப்படுவது எவ்வாறு என்ற ஒரு பெரிய உயிரியல் அறிவியல் கேள்விக்கு இந்த மூவரும் பதில் கண்டறிந்திருப்பதாக இவர்களுக்கு நோபல் பரிசை அறிவித்துள்ள ஸ்வீடனின் கரோலின்ஸ்கா கழகம் கூறியுள்ளது.


முனைக்கூறு (Telomere) என்றழைக்கப்படும் குரோமோசோம்களின் முனைகளிலும், டெலொமியர்களை உருவாக்கப் பயன்படும் டெலொமெரேஸ் என்ற நொதிமத்திலுமே இக்கேள்விக்கான தீர்வு அடங்கியுள்ளது என்பதை இந்த அறிவ்வியலாளர்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


புற்றுநோய் மற்றும் மூப்படைதல் தொடர்பான ஆராய்ச்சிகளில் இவர்களுடைய கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது.

எலிசபெத் பிளாக்பர்ன்

ஆஸ்திரேலியாவில் தாஸ்மானியாவில் 1948-ல் பிறந்த இவர், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1975-ல் டாக்டர் பட்டம் பெற்றவர்.

ஜேக் சோஸ்டாக்

லண்டனில் 1952-ல் பிறந்தார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள இவர் நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1977-ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1979 முதல் ஹார்வர்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

கரோல் கிரெய்டர்

அமெரிக்கரான கரோல் கிரெய்டர் 1961-ல் பிறந்தார். 1987-ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

மூலம்

தொகு