2009 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டது

செவ்வாய், அக்டோபர் 6, 2009, சுவீடன்:

டிஜிட்டல் பிம்ப உணரி (சிசிடி சென்சார்)


டிஜிட்டல் புகைப்பட தொழில் நுட்பத்தை உருவாக்கிய மற்றும் கண்ணாடியிழை வலையமைப்பு மூலம் உலகத் தகவல் தொடர்புகளை இணைக்க உதவிய பிரித்தானிய, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த மூன்று இயற்பியலாளர்களுக்கு 2009 ஆம்ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


கண்ணாடி இழையின் ஊடான ஒளியின் தொலைதூர பரிமாற்றத்தில் படைத்த புதுமைகளுக்காக பிரித்தானியாவைச் சேர்ந்த சார்ல்ஸ் காவோ என்பவருக்கு இந்த பரிசின் அரைவாசியை ஸ்டாக்கோமில் இருக்கின்ற நடுவர்கள் வழங்கியுள்ளனர்.


அதேவேளை டிஜிட்டல் பிம்ப உணரி (CCD Sensor) குறித்த கண்டுபிடிப்புக்காக அடுத்த அரைவாசிப் பகுதி கனடாவின் வில்லார்ட் பாயில், அமெரிக்கரான ஜார்ஜ் சிமித் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


மனித சமுதாயத்தையே தற்போது ஒரு குடைக்குள் கொண்டுவந்துள்ள நவீன தொலைதொடர்பு இணைப்புக்கு முதுகெலும்பாய் அமைந்த இவர்களின் கண்டுபிடிப்புகளை பாராட்டி மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


உலகத்தில் எந்த மூலையில் உள்ளவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதும், தகவல்களை இணையதளம் மூலம் மிகத் துரிதமாகப் பரிமாறிக்கொள்வதும் இவர்களின் கண்டுபிடிப்புகளால்தான் சாத்தியமானது.


சார்ல்ஸ் காவோ


சீனாவின் ஷங்காயில் 1933-ம் ஆண்டு பிறந்தவர். பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றுள்ளார். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் 1966-ம் ஆண்டு மின் பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றார். ஷாங்காய் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி 1999-ல் ஓய்வு பெற்றார்.


ஜார்ஜ் இ ஸ்மித்


அமெரிக்காவில் 1930-ம் ஆண்டு பிறந்தவர். இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் உள்ள பெல் ஆய்வுக் கூடத்தில் 1986-ல் ஓய்வு பெற்றார்.


வில்லார்ட் பாயில்


கனடாவில் 1924-ம் ஆண்டு பிறந்தார். இவர் அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றுள்ளார். கனடாவில் உள்ள மேக்கில் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் டாக்டர் பெற்றவர். அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் உள்ள பெல் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றி 1979-ல் ஓய்வு பெற்றார்.

மூலம்