1973 மாணவர் படுகொலைகளை நினைவுகூர்ந்து கிரேக்கத்தில் பெரும் ஆர்ப்பாட்டம்

வியாழன், நவம்பர் 19, 2009


கிரேக்கத் தலைநகர் ஏதென்சில் செவ்வாயன்று 15 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பங்குபற்றிய பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 1973 ஆம் ஆண்டில் பொலிடெக்னிக் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையை நினைவுகூரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.


கொலை செய்யப்பட்ட மாணவர்களை நினைவுகூரும் கொடிகளை ஏந்தியவாறு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து இடம்பெற்ற கலவரத்தில் 13 காவல்துறையினர் காயமடைந்தனர்.


கிரேக்கத் தலைநகர் ஏதெனிசிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றனர். இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரே அதிகமாகக் காணப்பட்டனர்.


மேள தாளங்களுடனும் ஆவேசமான கோசங்களுடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைத் தடுக்க முயன்ற பொலிஸாரை நோக்கி கற்கள், போத்தல்களை வீசியதுடன், பெற்றோல் குண்டுகளையும் வீசினர். ஆர்ப்பாட்டத்தைக் கலைக்கப் பொலிஸார் கண்ணீர்ப் பிரயோகம் மேற்கொண்டனர். ஒரு மணவன் கைது செய்யப்பட்டார். இருநூறு பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.


கிரேக்கத்திலுள்ள பொலிடெக்னிக் பல்கலைக்கழக மாணவர்கள் 1973ம் ஆண்டு கிரேக்க இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றில் இறங்கினர். அன்றைய ஆர்ப்பாட்டத்தை இராணுவ அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. பல்கலைக்கழக வளவிற்குள் நுழைந்த இராணுவ போர் தாங்கிகள் மாணவர்களை நோக்கி குண்டுகளை வீசியது. வீதிகளில் சில மாணவர்கள் கிடத்தப்பட்டு அவர்களுக்கு மேலால் யுத்த தாங்கிகள் சென்றன.


இதில் ஏராளமான மாணவர்கள் நசிந்து பலியாகினர். அப்போதைய இராணுவ ஆட்சியாளர்கள் 1967 முதல் 1974 வரை கிரேக்கத்தை ஆண்டனர்.


மாணவர்களை மிகக் கொடூரமாக அடக்கிய இந்த இராணுவ அரசுக்கு உதவிய அமெரிக்காவுக்கு எதிராக கிரேக்கத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்னால் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்கள் சஹ்தம் போட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள், இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.


சென்ற ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு மாணவர் கொல்லப்பட்டார்.

மூலம் தொகு