ஸ்பெயினில் இறைச்சி மீது லட்சுமி விளம்பரம்

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வியாழன், சூலை 9, 2009

ஸ்பெயினில் தயாரிக்கப்படும் இறைச்சி உணவு வகைகளில் லட்சுமி படம் போன்று விளம்பரம் செய்து இருந்தமையால் அங்குள்ள இந்து அமைப்புக்கள் போர்க் கொடி தூக்குகின்றன.

அதன் விபரம் வருமாறு:

அமெரிக்காவில் பர்கர் கிங் என்ற துரித உணவு தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா முழுவதும் கிளைகள் உள்ளன. வெளிநாடுகளுக்கும் துரித உணவுகளை இந்த நிறுவனம் அனுப்பி வருகிறது.

பர்கர்கிங் நிறுவனம் தயாரிக்கும் சாண்ட்விச் புகழ் பெற்றது. சமீபத்தில் ஸ்பெயினில் இந்த நிறுவனத்தின் சாண்ட்விச் பாக்கெட்டுக்களில் இந்து கடவுளான லட்சுமி படம் இடம் பெற்றது. சாண்ட்விச் மீது லட்சுமி அமர்ந்திருப்பது போல அச்சிடப்பட்டிருந்தது.

சாண்ட்விச் என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கு இடையே வெண்ணை இறைச்சி போன்றவற்றை வைத்து சுற்றப்பட்ட கலவை ஆகும். இறைச்சி உணவு மீது லட்சுமி இருப்பது போன்ற படத்தைப் பார்த்ததும் ஸ்பெயினில் உள்ள இந்துக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து வாஷிங்டனில் உள்ள இந்து அமைப்புகள் பர்கர்கிங் உணவு நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இறைச்சி மீது லட்சுமி இருப்பது போன்ற படத்தை இனி வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளன. மேலும் இந்துக் கடவுளை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்கும்படியும் இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதனையடுத்து உடனடியாக இந்த விளம்பரத்தை வெளியிட்டதற்காக பர்கர் நிறுவனம் மன்னிப்பு கோரியதோடு, அந்த விளம்பரம் தடைசெய்யப்படும் என உறுதியும் அளித்தது.

இது தொடர்பாக பர்கர் கிங் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டென்சி வில்சன் கூறுகையில், பர்கர் கிங் நிறுவனம் தனது அனைத்து வாடிக்கையாளர்களை மட்டுமல்லாமல், அனைத்து மதத்தவர்களையும் மிகவும் மதிப்பதாக தெரிவித்தார்.

குறிப்பிட்ட அந்த விளம்பரம் ஸ்பெயினில் உள்ள தங்கள் 3 கிளைகளிலும் வியாபரத்தை பெருக்கும் நோக்கத்துடன், உள் விளம்பரம்தான் செய்யப்பட்டிருந்ததாகவும், யாரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த விளம்பரம் செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

மூலம்

தொகு