வெறும் கண்களால் பார்க்கக்கூடிய முப்பரிமாணத் தொலைக்காட்சி
வியாழன், அக்டோபர் 7, 2010
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 26 திசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது
சிறப்புக் கண்ணாடிகள் எதுவும் பயன்படுத்தாமல் வெறும் கண்களால் பார்க்கக்கூடிய முப்பரிமாணத் (3D) தொலைக்காட்சிப் பெட்டிகளை சப்பானின் டொசிபா நிறுவனம் தயாரித்துள்ளது.
இவ்வகைத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வில்லைகளைக் கொண்ட தாள் ஒன்றைப் பயன்படுத்தி ஒன்றின் மேல் ஒன்றாக படியக்கூடிய ஒன்பது பிம்ப வரிசைகளை உருவாக்க வல்லது. இதனைப் பார்ப்பவர் தனது ஒவ்வொரு கண்ணாலும் வெவ்வேறு படிமங்களைப் பார்க்கக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் திரையில் முப்பரிமாண மாய வடிவத்தைப் பார்க்கலாம்.
"தொலைக்காட்சியை கண்ணாடி இல்லாமல் பார்ப்பது கட்டாயம் இயற்கையாக இருக்கும்,” என டொசிபா நிறுவனத் தலைவர் மசாக்கி ஊசுமி தெரிவித்தார்.
எனினும், தெளிவான முப்பரிமாணப் படிமங்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஒருவர் ஒரு குறிப்பிட்டளவு தூரத்தில் இருக்க வேண்டும். அதாவது, 20 அங்குலத் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் 35 அங்குல (90 செமீ) தூரத்தில் ஒருவர் இருந்து பார்க்க வேண்டும். அத்துடன் 40 பாகை கோண எல்லைக்குள் ஒருவர் இருக்க வேண்டும்.
இக்கட்டுப்பாடுகளுக்காகவே சொனி, சாம்சங், மற்றும் பனசோனிக் போன்ற பெரும் நிறுவனங்கள் தனது தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு சிறப்புக் கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றன.
டொஷிபாவின் சிறிய ரகத் தொலைக்கட்சிப் பெட்டிகள் 120,000 யென்களுக்கு ($1,400) விற்கப்படும் என டொஷிபா அறிவித்துள்ளது. உள்ளூரில் ஒரு மாதத்திற்கு 1,000 பெட்டிகள் வரை விற்கப்படும் என டொசிபா நம்பிக்கை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் சந்தைக்கு விடப்படும் நாள் தெரியவில்லை.
டோக்கியோவில் இடம்பெற்ற சீடெக் இலத்திரனியல் கண்காட்சியில் இந்த முப்பரிமாணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஐரோப்பாவின் முதலாவது முப்பரிமாணத் தொலைக்காட்சிச் சேவையை ஸ்கை நிறுவனம் சென்ற வாரம் அறிமுகப்படுத்தியிருந்தது.
மூலம்
- Toshiba show 3DTV without glasses, பிபிசி, அக்டோபர் 4, 2010
- Toshiba unveils 3D TV that doesn't require glasses, தி ஏஜ், அக்டோபர் 4, 2010