வியாழன் கோளில் மோதுகை இடம்பெற்றதை நாசா உறுதிப்படுத்தியது

செவ்வாய், சூலை 21, 2009

வியாழன் கோளின் அடிப்பாகத்தில் தெரியும் வெள்ளைப் புள்ளியே மோதுகையினால் ஏற்பட்ட தாக்கமாகும்


வியாழன் கோளில் ஜூலை 19 இல் அவதானிக்கப்பட்ட பூமியின் அளவினை ஒத்த கரும் புள்ளி அங்கு ஒரு மோதுகை இடம்பெற்றதனால் ஏற்பட்டுள்ளதென்பதை நாசாவின் மவுனா கீ அவதானநிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. வால்வெள்ளி அல்லது சிறுகோள் ஒன்று வியாழனுடன் மோதியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வியாழனின் தென்முனைக்குக் கிட்டவாகத் தோன்றியுள்ள இக்கரும்புள்ளி பற்றி முதன் முதலாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சைச் சேர்ந்த வானியலாளர் அந்தனி வெஸ்லி என்பவர் அறிவித்தார். இவர் ஜூலை 19 இல் இதனைக் கண்டுபிடித்து அச்செய்தியை நாசாவுக்கு அறிவித்தார். இதனை அடுத்து நாசாவின் அவதான நிலையம் வியாழனை ஆராயத் தொடங்கியது. கிளென் ஓர்ட்டன் தலைமையிலான குழு வெஸ்லியின் கூற்றை உறுதிப்படுத்தியதுடன், 1994 ஆம் ஆண்டு ஜூலை 16 முதல் ஜூலை 22 வரையான காலப்பகுதியில் ஷூமேக்கர் லெவி-9 (Comet Shoemaker-Levy 9) என்ற வால்வெள்ளி வெடித்துச் சிதறியதால் வியாழனில் இதேமாதிரியான கருப்புப் பகுதி ஏற்பட்டிருந்ததையும் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்