விமான குண்டுத்தாக்குதல் சதி வழக்கில் மூன்று பிரித்தானியர்களுக்கு ஆயுட்தண்டனை

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

திங்கள், செப்டம்பர் 14, 2009, லண்டன்:

குண்டுதாரிகள் தாக்குதலிடத் திட்டமிட்ட விமான வழிகளைக் காட்டும் வரைபடம்
படிமம்: டிஎஸ்ஏ.


இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் விமானங்களை திரவ வெடிகுண்டுகள் மூலம் வெடிக்கச்செய்ய முயன்ற குற்றச்சாட்டின்பேரில் பிரித்தானியாவைச் சேர்ந்த மூன்று முஸ்லிம்களுக்கு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.


இவர்களுக்கு தண்டனை விதித்த நீதிமன்ற நீதிபதி, இவர்களில் ஒருவர் ஆயுட்காலம் முழுமையும் சிறைக்குள்ளேயே கழிக்கவேண்டி நேரலாம் என்று கூறினார்.


இவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சமாக 30 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் தலைவர் எனக் கருதப்படும் அப்துல்லா அகமது அலி (28) என்பவருக்கு குறைந்தது 40 ஆண்டுகளும், அசாத் சர்வார் (29) என்பவருக்கு 36 ஆண்டுகளும், தன்வீர் உசைன் (28) என்பவருக்கு 32 ஆண்டுகளும் சிறைத்தண்டனையை இங்கிலாந்தின் வோல்விச் நீதிமன்றம் விதித்தது.


2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சமமான ஒரு அட்டூழியத்தை நடத்த இவர்கள் சதி செய்ததாக நீதிபதி தெரிவித்தார்.


இவர்களின் சதி கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானப்பயணிகள் கொண்டு செல்லத்தக்க திரவங்கள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தச் சதிச்செயல் அல்கயீதாவால் வழி நடத்தப்பட்டதாக புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

மூலம்

தொகு