விண்கற்களின் நிறம் பூமியை அண்மிக்கும் போது மாறுவது ஏன்?

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வெள்ளி, சனவரி 22, 2010



சிறுகோள்கள் பூமியை அண்மிக்கும் போது அல்லது அதனைத் தாண்டும் போது பூமி அதனை அதிரடையச் செய்வதால் அவற்றின் நிறமும் மாற்றம் அடைகின்றது என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


951 காஸ்பிரா சிறுகோள்
நியூயோர்க்கில் அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு விண்கல்

பூமியில் விழும் விண்கற்களின் (meteorites) நிறம் விண்வெளியில் சிறுகோள்களின் (asteroids) நிறத்துடன் ஒத்துப்போகாதது இதுவரையில் அறிவியலாளர்களுக்கு பெரும் புதிராக இருந்து வந்தது.


விண்வெளியில் சூரியக் கதிர்வீச்சு சிறுகோள்களின் மேற்பரப்பைச் சிவப்பாக்குகின்றது என முன்னர் நடத்தாப்பட்ட ஆய்வுகள் தெரிவித்திருந்தன.


பூமியை அண்மிக்கும் போது அவை எப்படி தமது மேற்பரப்பை மாற்றியமைக்கின்றன என்பதை "நேச்சர்" (Nature) அறிவியல் இதழ் தற்போது வெளியிட்டுள்ளது.


அமெரிக்காவின் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் பேராசிரியர் ரிச்சார்ட் பின்செல் என்பவர் இவ்வாய்விற்குத் தலைமை தாங்கினார்.


தனது குழுவினர் விண்வெளியில் சிறுகோள்களின் நிறத்தையும், அச்சிறுகோள்களில் இருந்து பூமியில் விழும் விண்கற்களின் நிறங்களையும் ஒப்பிட்டு இவ்வாய்வை மேற்கொண்டிருந்தனர் என அவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


"அநேகமான சிறுகோள்கள் இளம் சிவப்பு நிறம் கொண்டவை," என பேராசிரியர் பின்செல் தெரிவித்தார். சூரியக் காற்று அவற்றின் தாதுக்களைச் சேதப்படுத்தி அவற்றைச் சிவப்பாக மாற்றுகின்றன.


ஆனால், சில சிறுகோள்கள் பூமிய நெருங்கும் போது அவற்றின் நிறம் இளம் சிவப்பாக இருப்பதில்லை. இவற்றின் நிறம் பூமியில் அறிவியலாளர்களால் சேர்க்கப்பட்ட விண்கற்களின் நிறங்களுடன் ஒத்துப் போகின்றன, என்கிறார் பேராசிரியர் பின்செல்.


"பூமியை அவை நெருங்கும் போது பூமி அவற்றிற்கு ஒரு "நிலநடுக்கத்தை" எற்படுத்துகின்றது. இந்த நிலநடுக்கம் அவற்றின் மேற்பரப்பை மாற்றியமைக்கின்றது".


இந்த நிற மாற்றங்களில் இருந்து, சிறுகோள் ஒன்று பூமியை அண்மித்ததா இல்லையா என்பதைக் கண்டு கொள்ளலாம் என பேராசிரியர் பின்செல் தெரிவித்தார்.

மூலம்

தொகு