வால்வெள்ளியில் உயிரின மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டது

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

சனி, ஆகத்து 22, 2009, ஐக்கிய அமெரிக்கா:

வைல்ட்-2 வால்வெள்ளி


அமெரிக்காவின் நாசா அறிவியலாளர்கள் வால்வெள்ளி ஒன்றில் இருந்து பெறப்பட்ட மாதிரியை ஆராய்ந்ததில் அதில் கிளைசின் (glycine) எனும் அமினோ அமிலம் இருந்ததை இனங்கண்டுள்ளனர்.


அமினோ அமிலங்கள் உயிரினங்களை ஆக்கியுள்ள பெரிய இரசாயன மூலக்கூறுகளில் புரத மூலக் கூறுகளை ஆக்குவதில் பங்களிக்கும் ஒரு வகை எளிமையான உயிர் இரசாயனக் கூறுகள் ஆகும். மனிதன் போன்ற உயிரினங்களில் மொத்தம் 20 அமினோ அமிலங்கள் உள்ளன. அதில் கிளைசினும் அடங்குகிறது.


வைல்ட்-2 (Wild-2) என்ற வால்வெள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட தூசுகள் நாசாவின் ஸ்டார்டஸ்ட் (Stardust) என்ற விண்கலம் மூலமாகச் சேகரிக்கப்பட்டன. இவ்விண்கலம் 5-கிமீ அகலமுள்ள பனிக்கட்டி-வால்வெள்ளியான வைல்ட்-2 ஐ ஜனவரி 2004 இல் அண்மித்திருந்தது. வால்வெள்ளியின் மையத்தில் இருந்து 240 கிமீ தூரத்தில் வைத்து அது வெளியேற்றிய தூசுகளை இவ்விண்கலம் சேகரித்து 2006 ஆம் ஆண்டு பூமிக்குக் கொண்டு வந்தது.


இவற்றில் காணப்பட்ட கிளைசினின் கட்டமைப்பில் உள்ள காபன் மூலக்கூறு பூமியில் உள்ள கிளைசின் கொண்டுள்ள காபனை விட கனதியானது என்றும் நாசா அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.


விண்கற்களில் ஏற்கனவே இவ்வாறான உயிர் வேதியியல் மூலக்கூறுகள் முன்னரும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது.


பூமியில் உயிரின் உற்பத்தி என்பது பூமியோடு வால்வெள்ளிகளின் மோதலால் கூட ஏற்பட்டிருக்கலாம் என்பது போன்ற விஞ்ஞான கோட்பாடுகள் முன்னைய காலங்களில் வெளி வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


எனினும் இந்தக் கண்டுபிடிப்பு தற்போது இருக்கும் பூமியில் நிகழ்ந்த இரசாயன கூர்ப்பின் மூலமான உயிரின் உற்பத்தியை நிராகரிக்கப் போதுமானது அல்ல.. என்றே கணிக்கப்படுகிறது. அதற்கு இன்னும் நிறைய ஆதாரங்களை அறிவியல் உலகம் திரட்ட வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

மூலம்

தொகு