வணங்காமண் நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் இலங்கை அரசிடம் கையளித்தது
சனி, அக்டோபர் 24, 2009
இலங்கையின் வடபகுதியில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில், இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களால் கடந்த மார்ச் மாதத்தில் அனுப்பப்பட்ட உதவிப்பொருட்கள் நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு தற்போது வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
கேப்டன் அலி என்ற கப்பலில் (வணங்காமண் கப்பல்) அனுப்பப்பட்ட இந்த உணவுப் பொருட்கள் முதலில் இலங்கை அரசாங்கத்தால், துறைமுகத்துக்குள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படவே, இந்த விவகாரத்தில் தலையிட்ட இந்தியா, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அவற்றை கொழும்புக்கு கொண்டு செல்ல உதவியது.
இருந்தபோதிலும் சில மாதங்கள் வரை அந்தப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்திலேயே தேங்கிக்கிடந்தன.
ஆனால், தற்போது இலங்கை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அவை துறைமுகத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு தற்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு விநியோகத்துக்காக அனுப்பப்படுவதாக, நிவாரண சேவைகளுக்கான இலங்கை அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.
இதன் படி 27 கொள்கலன்களை ஏற்றிய பாரவூர்திகளின் மூலம், 680 மெற்றிக் தொன் பெறுமதியான பொருட்கள் இன்று வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இவ்வளவு காலம் துறைமுகத்தில் இந்த பொருட்கள் தேங்கி கிடந்தமைக்காக, அரசாங்கம் 20 லட்சம் ரூபாவையும், இலங்கை செஞ்சிலுவை சங்கம் 6 லட்சம் ரூபாவையும் தாமதக்கட்டணங்களாக செலுத்தியுள்ளன.
இதற்கிடையில் இந்த பொருட்கள் மெனிக்பார்ம் தடுப்பு முகாம் மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருட்களில் பெரும்பாலானவை டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்பதால், அவை கெடாமல் பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பதாகவும் அமீர் அலி தெரிவித்தார்.
இது குறித்து, "மனிதம்' தொண்டு நிறுவன செயல் இயக்குனர் அக்னி சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐரோப்பிய மக்களால் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் தமிழர்களை சென்று சேரக்கூடாது என்ற நோக்கில் இலங்கை அரசு செயல்பட்டது. இப்போது எந்த முறையான காரணமும் சொல்லாமல் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளது. அவை முறையாக தமிழர்களை சென்று சேராது. நிவாரணப் பொருள்கள் வீணாகுமானால் அதற்கான பொறுப்பை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமே ஏற்க வேண்டும். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இந்த நிவாரணப் பொருள்கள் இலங்கைத் தமிழர்களுக்கு சென்று சேர குரல் கொடுக்க வேண்டும்." இவ்வாறு சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தொகுமூலம்
தொகு- "Containers filled with IDP aid headed to Vauniya". டெய்லி மிரர், அக்டோபர் 24, 2009
- "'வணங்கா மண்" நிவாரணப் பொருட்கள் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் கையளிப்பு". தமிழ்வின், அக்டோபர் 23, 2009
- "'வணங்காமண்' நிவாரண பொருள்கள் சென்று சேர்வதில் தொடர்கிறது சிக்கல் : செஞ்சிலுவை சங்கம் 'திடீர்' பல்டி". தினமலர், அக்டோபர் 24, 2009