வட இந்தியாவில் இரு தொடருந்துகள் மோதியதில் 22 பேர் கொல்லப்பட்டனர்
புதன், அக்டோபர் 21, 2009, தில்லி:
தில்லி சென்ற கோவா கடுகதி தொடருந்து உத்தரப் பிரதேச நகரான மதுரா அருகே நின்றுகொண்டிருந்த மேவார் கடுகதியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 22 பயணிகள் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கோவா கடுகதி, மேவார் கடுகதி மீது இன்று அதிகாலை 4.50 மணியளவில் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானதாக வட-மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ் வாஜ்பாய் தெரிவித்தார்.
மதுரா-விருந்தாவன் இடையே இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் மேவார் எக்ஸ்பிரஸின் பதிவுசெய்யப்படாத பெட்டி சேதமடைந்தது. கோவா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர் செய்த தவறு காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என ஆக்ரா மண்டல ரயில்வே மேலாளர் திரிபாதி தெரிவித்தார்.
சில பயணிகள் ரயிலுக்குள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் ரயில்வே வாரியத்தின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் இவ்விபத்தில் மேலும் சிலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அரசுக்குச் சொந்தமான இந்திய ரெயில்வே நாடு முழுவதும் கிட்டத்தட்ட 9,000 பயணிகள் தொடருந்துகளை இயக்கி வருகிறது.இவற்றில் நாள்தோறும் 188 மில்லியன் மக்கள் பயணித்து வருகிறார்கள்.
மூலம்
தொகு- "India trains collision kills 22". பிபிசி, அக்டோபர் 21, 2009
- "கோவா-மேவார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதல்: 12 பேர் பலி". தினமணி, அக்டோபர் 21, 2009