ராஜஸ்தான் எண்ணெய்க் கிடங்கில் தீ: 5 பேர் இறப்பு
சனி, அக்டோபர் 31, 2009
இந்தியாவில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரின் புறநகர்ப் பகுதியில் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபன நிறுவனத்தின் எண்ணெய்க் கிடங்கொன்றில் ஏற்பட்ட பெரும் தீ காரணமாக குறைந்தது 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். 150 பேர் வரையீல் காயமடைந்தனர். தீயை அணைக்க முயற்சித்துவரும் தீயணைப்பு படையினருக்கு உதவுவதற்காக இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கிடங்கில் பணியாற்றிவந்த மேலும் ஆறு பேரைக் காணவில்லை என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கூறுகிறது. வியாழன் பின்னிரவு 7:30 மணியளவில் தீப்பிடித்து எண்ணெய்க் கிடங்கு மொத்தத்திலும் அக்கம் பக்கத்து இடங்களிலும் தீ கொளுந்துவிட்டு எரிகிறது. 25 கிமீ தூரத்துக்கு தீக்கொழுந்துகளைக் காண முடிவதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் வாழ்ந்த 5 இலட்சம் பேர் பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
தீயை அணைப்பது மிகவும் சிரமமாக இருப்பதால், எண்ணெய் முழுவதும் எரிந்து தானாக தீ அடங்கும் வரை காத்திருக்க வேண்டுமெனத் தெரிவதாக எண்ணெய் வளத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த தீவிபத்தினால் இந்தியன் எண்ணெய் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன.
மூலம்
தொகு- "Five die in huge India oil blaze". பிபிசி, அக்டோபர் 30, 2009
- "ஜெய்ப்பூரில் இந்தியன் ஆயில் கிடங்கில் தீ விபத்து: 5 லட்சம் மக்கள் வெளியேற்றம்". தினமணி, அக்டோபர் 31, 2009