ராஜரத்தினத்துக்கு நட்பு ரீதியாக 'தகவல்கள்' வழங்கியதாக முன்னாள் இன்டெல் அதிகாரி சாட்சியம்

புதன், மார்ச்சு 23, 2011

ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரும் பங்கு மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ராஜ் ராஜரத்தினத்துக்கு தாம் தனது நிறுவனத்தின் இரகசியத் தகவல்களை வழங்கியதாக இண்டெல் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ராஜிவ் கோயல் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


முன்னாள் கோடீசுவரரான ராஜரத்தினம் உட்தகவல் வணிக மோசடியில் ஈடுபட்டு 45 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியைப் பெற்றார் என அவர் மீது குற்றம் சாடப்பட்டுள்ளது. ஆனால் அவர் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.


புகழ் பெற்ற கெலொன் (Galleon) நிறுவனத்தின் உரிமையாளரான ராஜரத்தினம் (53) 2009 அக்டோபர் 16 ஆம் நாள் அமெரிக்கப் புலனாய்வுத்துறையால் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இவரின் மீது உள்தகவல் வணிகம் செய்தாக 34பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் பின்னர் 100 மில்லியன் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


அமெரிக்க பங்குச் சந்தையில் முன்கூட்டியே தகவல்களை பெற்று, அதன் அடிப்படையில் பெரிய அளவில் சற்று வீழ்ச்சியுறும் நிறுவனங்களின் பங்கை கொள்வனவு செய்து, பின்னர் அதனை விற்பதில் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்ததாகவே இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், இவருக்கு 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.


இலங்கையில் பிறந்தவரான ராஜ் ராஜரத்தினம், நியூயோர்க்கில் கெலோன் குழுமத்தை ஆரம்பித்து, அமெரிக்க பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்பனை செய்து வந்தார். பன்னாட்டு நிறுவனங்களில் உயர்மட்டத்திலுள்ள நண்பர்கள், நெருங்கியவர்கள் மூலம் தகவல்களைப் பெற்று, அதன் மூலம் பிரபல நிறுவனங்களின் பங்குகளை, அதிக விலைக்கு விற்றும், குறைந்த விலைக்கு வாங்கியும் லாபம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.


ராஜரத்தினத்தின் மிக நெருங்கிய நண்பரான ராஜிவ் கோயல் தனது நிறுவனத்தின் இரகசியங்களை வெளியுலகிற்குத் தெரிய வர சில நாட்களுக்கு முன்னர் அவருக்குக் கொடுத்ததாகத் தெரிவித்தார். 2008, மார்ச் 24 ஆம் நாள் உள்தகவல்களை அடிப்படையாக வைத்து 125,800 கிளியர்வயர் பங்குகளை ராஜரத்தினம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டு நாட்களின் பின்னர் கிளியர்வயர் மற்றும் ஸ்பிரிண்ட் நெக்ஸ்டெல் நிறுவனங்களுக்கிடையே புதிய ஒப்பந்தம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டது. இத்திட்டத்திற்கு இண்டெல் நிறுவனம் 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக மே 7 ஆம் நாள் அறிவித்தது. "இண்டெல் நிறுவனத்துக்கு நான் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டேன்" என கோயல் தனது வாக்குமூலத்தில் கூறினார்.


இவ்வழக்கில் அமெரிக்காவின் மிகப் பெரும் வணிக நிறுவனங்களான ஐபிஎம் மற்றும் இண்டெல் ஆகியவற்றின் ஊழியர்கள் உடபப் பலர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் தமது குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளனர்.


மூலம் தொகு