யுரேனியம் உலையை பன்னாட்டு அணுஆற்றல் முகமை பார்வையிட ஈரான் அனுமதி

சனி, செப்டம்பர் 26, 2009, ஈரான்:


ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் உலையை பன்னாட்டு அணுஆற்றல் முகமையின் (International Atomic Energy Agency - IAEA) ஆய்வாளர்கள் பார்வையிட அந்நாட்டின் அதிபர் முகமத் அகமதுனிசாத் அனுமதியளித்துள்ளார்.


ஈரானின் அணு திட்டங்கள் குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பல் உலக நாடுகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிற நிலையில், ஈரான் அதிபர் இந்த முடிவை எடுத்துள்ளார்.


பன்னாட்டு அணுஆற்றல் முகமை

யுரேனியம் செறிவூட்டல் உலையை சர்வதேச அணு சக்தி முகமை ஆய்வாளர்கள் பார்வையிட தமக்கு ஆடசேபணை ஏதுமில்லை என்று அதிபர் அகமதுனிசாத் கூறிவிட்டதால், தங்களுக்கும் அதில் பிரச்னை ஏதுமில்லை என்று ஈரான் அணுவாற்றல் தலைவர் அலி அக்பர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ஐஏஇஏ - வுடன் உடன்பாடு ஏற்பட்டவுடன் ஆய்வுக் குழு வரும் தேதியை அறிவிக்க இருப்பதாக அலி அக்பர் மேலும் தெரிவித்தார்.


ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அமெரிக்க வெளிநாட்டுச் செயலர் இலறி கிளிண்டன் நியூயார்க்கில் உரையாற்றும் போது பன்னாட்டு விதிகளுக்குட்பட ஈரான் தீர்மானித்திருப்பது வரவேற்புக்குரியதே என்று தெரிவித்துள்ளார்.


ஈரான் முன்னதாக இரண்டாவது அணுச் செறிவூட்டல் ஆலையை கட்டி வருவதாக தெரிவித்திருந்தது. ஈரானின் அணுத்திட்டம் தொடர்பில் இன்னும் ஐந்து நாட்களில் அந்நாட்டின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம் பெறவுள்ள நிலையில், இந்த விடயம் அப்படியான பேச்சுவார்த்தைகளுக்கு கூடுதலான ஒரு அவசரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது வாராந்திர வானொலி உரையில் நேற்று தெரிவித்திருந்தார்.


ஆனால் இரான் தனக்கு அணுஆயுத அபிலாஷைகள் இல்லை என்று கூறிவருகிறது. மேலும் குவாம் பகுதியில் இருக்கும் தனது அணு ஆலைக்கு கண்காணிப்பாளர்கள் வந்து விஜயம் செய்வது குறித்த தேதியை நிர்ணயம் செய்யவுள்ளதாகவும் அந்நாடு தெரிவிக்கிறது.

மூலம் தொகு