யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற ஆசன எண்ணிக்கை 6 ஆகக் குறையும்

ஞாயிறு, சூலை 31, 2011

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

இலங்கையில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 10 இலிருந்து 6 ஆக குறைக்கப்படும் என்று இலங்கை தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டிலிருந்து 3 இலட்சத்து 30 ஆயிரத்தால் குறைவடைந்திருப்பதால் அம்மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசன எண்ணிக்கையும் குறைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் குறைவதனால் எஞ்சியிருக்கும் 4 ஆசனங்களும் இலங்கையின் தென்மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் இரத்தினபுரி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கும் தலா ஒன்று என்ற அடிப்படையில் ஒதுக்கப்படவிருப்பதாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனங்களின் குறைக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இருந்தாலும் கூட, இதன் பின்னணி அரசியல் அடிப்படை கொண்டதாகும். எனவே அரசியல் ரீதியான தீர்வு காணப்படும் வரை இந்நடவடிக்கை இடை நிறுத்தப்படவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். "யாழ். மாவட்டத்தில் 2009 வரை 816,005 வாக்காளர்கள் பதிவாகி இருந்தனர். இதில் 331,214 பெயர்கள் அகற்றப்பட்டு, தற்போதைய 2010ஆம் வருட பதிவில் 484,791 எஞ்சியுள்ளன. இந்த அடிப்படையிலேயே நாடாளுமன்ற ஆசனங்களின் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளையில் யாழ். மாவட்ட பதிவிலிருந்து குறைக்கப்பட்ட சுமார் 330,000 பேரில் ஒரு தொகையினர் வெளிநாடு சென்றுவிட்டதாகவும், பிறிதொரு தொகையினர் மேல்மாகாணத்திற்கு குடிபெயர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நாட்டைவிட்டு தமிழர்கள் வெளியேறி உள்ளமைக்கு போரும், தேசிய இனப்பிரச்சினையும் பாரிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. இன்று வெளிநாடுகளில் குடியேறியுள்ள அனைவருமே அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்றுவிட்டார்கள் என்றுகூற முடியாது. அத்துடன் சுமார் 1 இலட்சம் இலங்கையர் தமிழ் நாட்டிலே அகதிகளாக இருக்கின்றார்கள். இவை அனைத்தும் தேசிய இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டவையாகும். எனவே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை இந்நடவடிக்கை ஒத்திவைக்கப்படவேண்டும்," என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்வது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசித்து வருவதாக அக் கட்சியின் யாழ்.மாவட்ட எம்.பி. மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


மூலம்

தொகு