யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு, இயந்திரங்கள் எரிப்பு

சனி, ஏப்பிரல் 13, 2013

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் அலுவலகம் இன்று அதிகாலையில் ஆயுதம் தாங்கிய குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது. பணியாளர்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அச்சியந்திரங்களைத் தீ வைத்திக் கொளுத்தியுள்ளதாக அப்பத்திரிகையின் ஆசிரியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


“இன்று அதிகாலை 5 மணியளவில் வழக்கமான பத்திரிகை விநியோகம் ஆரம்பமாக இருந்த சமயத்தில் அச்சகப் பகுதிக்குள் நுழைந்த ஆயுதம் தரித்த மூவர் அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி உள்நுழைந்து பணியாளர்களையும் அச்சுறுத்தியுள்ளனர். உள்நுழைந்த போது இயந்திரங்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு இயந்திரங்களைச் சேதமாக்கிய பின்னர் அவற்றுக்கு பெற்றோல் ஊற்றித் தீ வைத்தனர்," என உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேமநாத் தேவநாயகம் தெரிவித்தார்.


"சரளமாகத் தமிழில் கதைத்து, ஊழியர்களை வெளியேறுமாறு பணித்தனர். அவர்கள் வெளியேற மறுக்கவே வானை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். உடனடியாகவே பணியாளர்கள் வெளியேறியதும் இயந்திரங்களுக்குத் தீவைத்துக் கொளுத்தினர். தெய்வாதீனமாக இத்தாக்குதலில் எவரும் காயமடையவில்லை," என அவர் கூறினார். அச்சகத்தில் இருந்த மிக முக்கியமான அச்சியந்திரம் திருத்த முடியாத அளவுக்குச் சேதமடைந்துள்ளது. நாளை ஞாயிறுப் பதிப்புடன் வெளிவரவிருந்த பின்னிணைப்புகள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.


கடந்த வாரம் உதயன் கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்துள் புகுந்த குழு அங்கிருந்த பணியாளர்களை துடுப்பாட்ட மட்டைகளினால் படுமோசமாகத் தாக்கி காயப்படுத்தியதுடன் பல லட்சம் பெறுமதியான பொருள்களைச் சேதமாக்கியிருந்தனர். ஊழியர்கள் நான்கு பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தமது கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.


"கடந்த வாரத் தாக்குதலை அடுத்து உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குப் பாதுகாப்புத் தருமாறு வடக்கின் காவல்துறைத் தலைவரிடம் எழுத்து மூலம் முறையிட்டிருந்தோம். ஆனாலும் அவர் இதுவரை எமக்குப் பதில் தரவில்லை," என பிரேமநாத் தெரிவித்தார். உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரான சரவணபவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.


இன்றைய தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்த தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் பணிப்பாளர் லக்சுமன் உலுகல்ல, "இது ஒரு உள் வீட்டு வேலை என்றே ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது," எனக் கூறினார். இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிக்கையான உதயன் அலுவலகம் அடித்து நொறுக்கி பத்திரிக்கைக்கு தீவைத்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


மூலம்

தொகு