மேலும் 25 இலங்கையர் ஆத்திரேலியாவில் இருந்து நவூருவுக்கு அனுப்பப்பட்டனர்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், அக்டோபர் 23, 2012

டார்வின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 இலங்கையர் நவூருவில் உள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பட்டுள்ளனர் என ஆத்திரேலியக் குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.


புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை ஆத்திரேலியாவுக்கு வெளியே வைத்துப் பரிசீலிக்க ஆத்திரேலிய நடுவண் அரசு அணமையில் முடிவெடுத்திருந்தது. அங்கு அனுப்பப்படுள்ள பெரும்பாலானோர் கிறித்துமசுத் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். டார்வினில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களும் அனுப்பப்பட்டுள்ளனர்.


நேற்றுப் பிற்பகல் கிறித்துமசுத் தீவின் தெற்கே மேலும் ஒரு தொகுதி புகலிடக் கோரிக்கையாளர்கள் படகு மூலம் தரை வந்திறங்கினர். இவர்கள் தற்காலிகமாக அங்கு தங்க வைக்கப்பட்டு, பின்னர் நவூருவிற்கு அனுப்பப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதற்கிடையில், நவூரு தடுப்பு முகாமிற்கு அனுப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களது அவலத்தைக் காண அங்கு நேரடியாக வரும்படி பன்னாட்டு ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தங்களுக்கு அவசரமாக உதவுமாறு சுமார் 400 புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த அழைப்பினை விடுத்துள்ளனர். இவர்களில் பலர் இலங்கையர் ஆவர்.


இவர்கள் அனைவரும் தற்காலிகக் குடில்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு 40 பாகை செல்சியசு வெப்பம் நிலவுவதோடு அடிப்படை வசதிகள் குறைவாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அங்குள்ள சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஐந்து பேர் வரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மூலம்

தொகு