மேற்கு வங்கத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 68 பேர் உயிரிழப்பு

வெள்ளி, மே 28, 2010

இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் நாச வேலையால் தடம்புரண்டு தனது பாதையில் விழுந்த தொடருந்து பெட்டிகளின் மீது அந்த தடத்தில் வந்த சரக்கு தொடருந்து மோதியதில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவோயிசத் தீவிரவாதிகளின் தாக்குதல் இதுவென நம்பப்படுகிறது.


கல்கத்தா-மும்பை ஞானேஸ்வரி கடுகதி தொடருந்து, இன்று வெள்ளிக்கிழமை 1.30 மணியளவில் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்திலுள்ள சர்திகா தொடருந்து நிலையம் அருகே மிக வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது, தொடருந்துப் பாதையில் தண்டவாளங்களை இணைக்கும் இணைப்புத் துண்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், அடுத்துள்ள தொடருந்துப் பாதையில் கவிழ்ந்தது. தொடருந்துப் பெட்டிகள் பயணிகளுடன் வீசி எறியப்பட்டன. இதனை அடுத்து, இரண்டாவது பாதையில் வேகமாக வந்துகொண்டிருந்த சரக்கு வண்டி, பயணிகள் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


பயணிகள் தொடருந்தின் குறைந்தபட்சம் ஐந்து பெட்டிகள் மோசமாக சேதமடைந்திருப்பதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள். 68 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


விபத்து நடந்து 14 மணித்தியாலங்க் கடந்து விட்ட நிலையில் அங்கு மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் பலர் மிகமோசமாக சேதமடைந்த ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.


விபத்து நடந்த மேற்கு மிதினாபூர் மாவட்டம் கல்கத்தாவில் இருந்து 150 கிமீ மேற்கே அமைந்துள்ளது. இது மாவோயிசத் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தச் சம்பவத்துக்கு மாவோயிச ஆதரவு அமைப்பான பிசிபிஏ எனப்படும் "காவல்துறை அராஜகத்துக்கு எதிரான மக்கள் அமைப்பு" பொறுப்பேற்றிருப்பதாக மேற்கு வங்க காவல்துறை பணிப்பாளர் புப்பிந்தர் சிங் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் அறிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் பிசிபிஏ அமைப்பினர், தாங்கள்தான் பொறுப்பு என்று எழுதி இரண்டு சுவரொட்டிகளை விட்டுச் சென்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.


மாவோயிசவாதிகளுக்கு எதிராக அரசு துவங்கியுள்ள கிரீன்ஹன்ட் நடவடிக்கையைக் கண்டித்து, அவர்கள் இன்று வெள்ளி முதல் ஒரு வாரம் கறுப்புவாரம் கடைபிடிக்கப் போவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இம்மாத முற்பகுதியில் சத்தீசுக்கரில் பேருந்து ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

மூலம் தொகு