மெக்சிக்கோ வளைகுடாவில் எண்ணெய் உண்ணும் நுண்ணுயிர் கண்டுபிடிப்பு

சனி, ஆகத்து 28, 2010

புதிய வகை நுண்ணுயிர் ஒன்றை லாரன்ஸ் பேர்க்லி தேசிய ஆய்வுகூடத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாண்டு மே மாதத்தில் இவர்கள் தமது ஆய்வுப் பணியை ஆரம்பித்தார்கள். மே 25 முதல் சூன் 2 வரையான காலப்பகுதியில் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில் உள்ள 17 ஆழ்-நீர் நிலைகளில் சேகரித்த 200 இற்கும் அதிகமான மாதிரிகளை ஆய்வு செய்ததில் இவர்கள் இந்த நுண்ணுயிரைக் கண்டுபிடித்தனர். பல்வேறு காலநிலைகளில் இந்த நுண்ணுயிர் எண்ணெய் உண்பதே இவை வேறு நுண்ணுயிர்களில் இருந்து வேறுபடுகின்றன. இப்பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கசிவினால் எண்ணெயின் அளவு இந்நீர்நிலைகளில் குறைந்திருப்பதற்கு இந்நுண்ணுயிர்கள் பெரும் பங்கை ஆற்றியுள்ளன என அவர்கள் தெரிவிக்கின்றனர்.


சில மாதங்களுக்கு முன்னர் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில் இடம்பெற்ற வரலாறு காணா எண்ணெய்க் கசிவை அடுத்து அங்கு சில பகுதிகளில் காணப்பட்ட எண்ணெய் மாயமாக மறைந்தது குறித்து அறிவியலாளர்கள் வியப்புத் தெரிவித்திருந்தனர். கசிந்த எண்ணெய் எவ்வாறு ஆழ்கடலினுள் சென்றது மற்றும் எவ்வளவு ஆழம் சென்றது என்பது குறித்த விபரமான வரைபடம் வரையப்பட்டிருந்தது. ஆனாலும் இவ்வெண்ணெயில் ஒரு பகுதி காணாமல் போயுள்ளது.


சயன்ஸ் இதழில் இது குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நுண்ணுயிர்கள் நீரில் உள்ள ஒக்சிசனின் அளவைப் பெரிதும் குறைக்கவில்லை என ஆய்வுக்குத் தலைமை தாங்கிய டெரி ஹசன் தெரிவித்தார். இப்புதிய நுண்ணுயிர்கள் ஓசியானோஸ்பிரிலாலெஸ் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இந்த நுண்ணுயிர்கள் 5 பாகை செல்சியஸ் குளிர் வெப்பநிலையில் வாழ்கின்றன.

தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு