மூதூர் படுகொலைகளுக்கு அனைத்துலக விசாரணை தேவை - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

செவ்வாய், ஆகத்து 4, 2009, ஐக்கிய அமெரிக்கா:


இலங்கையின் வடகிழக்கு பகுதியில், மூதூரில் வறுமைக்கு எதிரான அமைப்பு என்ற பிரெஞ்சு நிவாரண உதவி அமைப்பின் ஊழியர்கள் 17 பேர் 2006 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டதை தொடர்ந்து கொலையாளிகளை கண்டுபிடிக்க அரசாங்க விசாரணைகள் தவறியிருப்பதால் அனைத்துலக விசாரணை ஒன்று இது குறித்து நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது.


பிரான்ஸின் ஏசிஎஃப் எனப்படும் வறுமைக்கு எதிரான அமைப்பின் உள்ளூர் ஊழியர்கள் கொல்லப்பட்டமை பற்றிய விசாரணையை அரசாங்கம் கையாண்ட விதமே, ஒட்டுமொத்தமாக தவறானது என்று குறிப்பிட்டுள்ள அந்த மனித உரிமைகள் அமைப்பு சர்வதேச விசாரணை ஒன்று அத்தியாவசியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.


2006 ஆம் ஆண்டில் இந்த கொலைச் சம்பவங்கள் நடந்த சமயத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்திருந்த சமாதான கண்காணிப்பாளர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடும் போது "இக்கொலைகளில் அரசாங்க இராணுவத்தினர் சம்பந்தப்பட்டிருந்ததாக தாம் கருதுவதாக குறிப்பிட்டார்கள்".


ஆனாலும் அரசாங்க நடத்திய விசாரணையோ இக்கொலைகளுக்கு இராணுவம் பொறுப்பல்ல என்று கூறியுள்ளது.


"படுகொலைகள் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகிய நிலையில், ராசபக்சே அரசாங்கம் தாம் நீதியாக நடந்துள்ளது என வெளியுலகை நம்பவைக்க தமக்குள் நீதிவிசாரணையை நடத்தியுள்ளது," என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்டம் மற்றும் திட்டப் பணிப்பாளர் ஜேம்ஸ் ரொஸ் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக 2009 ஜூலைக்குப் பின்னரான அரசின் நடவடிக்கைகள் ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியிருந்த விசாரணைகள் தொடர்பில் மேலும் கரிசனையை அதிகரிப்பதாக அமைந்திருக்கின்றது எனவும் மனித உரிமைகள் காப்பகம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.


படுகொலைகள்


2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் நாள் பாரிசைத் தலைமையகமாகக் கொண்டுள்ள பட்டினிக்கு எதிரான அமைப்பு Action Contre La Faim (ACF) என்ற மனிதாபிமான அமைப்பின் 17 உள்ளுர் பணியாளர்கள் மூதூரில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் மரண தண்டனை விதிக்கப்படும் பாணியில் சுட்டுக்கொல்லப்பட்டனர். மூதூர் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் இடையில் போர் மூண்டிருந்த ஒரு சூழ்நிலையிலேயே இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன.


2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும் பணியில் இந்த மனிதாபிமான அமைப்பின் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மூதூரில் போர் மூண்டதையடுத்து அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.


இந்நிலையிலேயே 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதன் உள்ளூர்ப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் 16 பேர் தமிழர்கள். ஒருவர் முஸ்லிம்.


இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு இதில் சிறிலங்காப் படையினர் சம்பந்தப்படவில்லை எனவும், அதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் ஜூலை நடுப்பகுதியில் தெரிவித்தது. அத்துடன், படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களின் குடும்பத்தவர்கள் பாரிசை தலைமையகமாகக் கொண்ட குறிப்பிட்ட மனிதாபிமான அமைப்பிடமிருந்து நட்ட ஈட்டைக் கோருமாறும் சிறிலங்கா அரசு வலியுறுத்தி வருகின்றது.

தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு