மும்பை தாக்குதலின் முக்கிய எதிரி குற்றங்களை ஒப்புக் கொண்டார்
திங்கள், சூலை 20, 2009 மும்பை, இந்தியா:
மும்பையில் 2008 நவம்பர் 26ஆம் தேதியன்று நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் கைதான ஒரே குற்றவாளியான முகம்மது அஜ்மல் அமீர் கசாப், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியது, படுகொலைகள், உட்பட 86 குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
மும்பையில் நட்சத்திர ஹோட்டல்கள், சிஎஸ்டி தொடருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், வெளிநாட்டவர் உட்பட மொத்தம் 180 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டார். ஏனைய 9 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கசாப் மீதான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தனக்கு இருந்த தொடர்புகளை கசாப், சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகிலியானியிடம் இன்று ஒப்புக் கொண்டதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது திடீரென கசாப் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டமை அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது.
சி.எஸ்.டி ரயில் நிலையம், தெற்கு மும்பையில் காமா மருத்துவமனைக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதல்களில் தனக்கு தொடர்பு இருப்பதாக கசாப் கூறினார்.
தாஜ், ஓபராய் ஹோட்டல்கள் உட்பட 4 இடங்களில் தாக்குதலில் ஈடுபடும் நோக்கத்துடன் கராச்சியில் இருந்து படகு மூலம் தாமும், வேறு 9 பயங்கரவாதிகளும் மும்பைக்கு வந்ததாக கஸாப் குறிப்பிட்டுள்ளார்.