மலிவு தட்டைக் கணினி 'ஆக்காசு' இந்தியாவில் விற்பனைக்கு

வியாழன், அக்டோபர் 6, 2011

இந்தியாவில் ஆக்காசு (Aakash) என்ற மலிவு தட்டைக் கணினி (tablet) இந்திய அரசின் உதவியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய ரூபாய் 1750.00 அல்லது $35.00 விலையில் இந்த தத்தல் கணினி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விற்கப்படும்.


ஆக்காசு தத்தல் கணினி

இதை டாட்டாவிண்ட் என்ற கனடிய வணிக நிறுவனம் இந்திய அரசின் உதவியுடன் 5 ஆண்டு விருத்திக்குப் பின்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறு மிக வரவேற்புடன் கொண்டுவரப்பட்ட சிம்பியூட்டர் பின்னர் கைவிடப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இந்தச் சாதனைத்தை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒட்டுமொத்தமாக 1 கோடி மாணவர்களுக்கு இது போன்ற கணினிகளை அளிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பொதுச் சந்தையில் விற்கப்படும் போது இதன் விலை மூவாயிரம் ரூபாய்க்கும் சற்று குறைவாக இருக்கும்.


இந்தக் கணினியில் wifi எனப்படும் கம்பியில்லா இணைய வசதி உண்டு. அண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் மூலம் இது இயங்கும். இணையத்தில் இருக்கும் செய்திகளை வாசித்துச் சொல்லும் திறனும் இதற்கு உண்டு.


டில்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் இக்கணினியை அறிமுகப்படுத்தினார்.


கூகுள் அண்ட்ராய்டு (கட்டற்ற மென்பொருள்), ஆவண வாசிப்பான் போன்ற மென்பொருளுடன் கூடிய இந்தத் தத்தல் கணினியில், 256 எ.பி வேக நினைவகம், 2கிபை - 32 கிபை சேமிப்பு, இரண்டு யு.எசு.பி முனைகள், ஒலி, 7" தொடு திரை, புவியிடங்காட்டி, வலையில்லாப் பிணையம் (IEEE 802.11 a/b/g) ஆகியன உள்ளடங்கியுள்ளன.


மூலம் தொகு