பெருவில் புனர்வாழ்வு முகாம் தீப்பற்றியதில் 26 பேர் உயிரிழப்பு

ஞாயிறு, சனவரி 29, 2012

தென்னமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லீமாவில் போதைப்பொருள் புனர்வாழ்வு முகாம் ஒன்றில் நேற்று சனிக்கிழமை காலையில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.


போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் கிறிஸ்து அன்புக்குரியவர் மையம் என்ற இந்த முகாமில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வந்தனர். இவர்களுக்கு விவிலியப் பாடங்கள் மூலம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்தது.


முகாமின் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் பலரும் தீப்பரவியதும் முகாமை விட்டு வெளியேற முடியாமல் தீயில் அகப்பட்டுக் கொண்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். சிலர் சாளரங்களை உடைத்துக் கொண்டு வெளியேறினர்.


இது குறித்து சுகாதார அமைச்சர் அல்பேர்ட்டோ தெஜாடா கருத்துத் தெரிவிக்கையில், புனர்வாழ்வு நிலையம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதென்றும், இரண்டு தடவைகள் இதனை மூடுமாறு கேட்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சம்பவம் நடந்த போது அங்கு பொறுப்பானவர்கள் எவரும் இருக்கவில்லை என அவர் கூறினார். முகாமின் உரிமையாளர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


முகாம் தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை.


மூலம்தொகு