புவி சூடாதலைக் கட்டுப்படுத்த ஜி-8 நாடுகளின் உடன்பாடு போதாது: ஐ.நா.

வெள்ளி, சூலை 10, 2009

புவியைச் சூடாக்கச் செய்யும் வளிமங்களின் வெளியேற்றத்தை அடுத்த 40 ஆண்டுகளில் 80 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜி-8 மாநாட்டில் காணப்பட்டுள்ள உடன்பாடு போதுமானது அல்ல என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் கூறியுள்ளார்.

தொழில் புரட்சிக்கு முன்னர் இருந்ததிலும் பார்க்க 2 பாகை செல்சியஸ் மாத்திரமே வெப்பத்தை அதிகரிக்க அனுமதிப்பது என்ற இலக்கு வரவேற்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு காலந்தாழ்த்தாத பெரிய வெட்டு அவசியம் என்று கூறியுள்ள அவர், ஜி-8 நாடுகள் 2020 ஆம் ஆண்டை கால அளவாகக் கொண்ட இடைக்காலத்துக்கான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இத்தாலியில் இன்று நடக்கும் ஜி-8 நாடுகளின் விவாதத்துக்கு அமெரிக்கத் தலைவர் பராக் ஒபாமா தலைமை தாங்குகிறார்.

உலகின் முக்கிய 5 வளர்ந்துவரும் பொருளாதாரங்களும் தமது புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்ததுவதற்கு இணங்கச் செய்வதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையிலேயே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடனான சந்திப்பு ஒபாமா தலைமையில் நடைபெறவுள்ளது.

இச் சந்திப்பில் ஜி8 உறுப்பு நாடுகளான பிரித்தானியா, கனடா, பிரான்சு, செருமனி, இத்தாலி, சப்பான், இரசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்களும் பிரேசில், சீனா, இந்தியா, மெக்சிக்கோ, தென்னாபிரிக்கா மற்றும் எகிப்து ஆகிய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

2050 ஆம் ஆண்டுக்கான இலக்கு மிகவும் காலதாமதமானதென இந்தியா ஏற்கனவே விமர்சித்துள்ளது.

இதனால் டிசம்பரில் கோபன்ஹெகனில் நடைபெறவுள்ள காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டிலேயே உண்மையான இலக்குகள் நிர்ணயிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்

தொகு