புவியை ஒத்த கோள் கொரொட்-7பி பாறைகளைக் கொண்டுள்ளது

வியாழன், செப்டம்பர் 17, 2009

ஓவியரின் கற்பனையில் கொரொட்-7பி கோள்


நமது சூரியக் குடும்பத்துக்கு அப்பால் 500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறைகளால் ஆன முதல் கோள் பற்றிய மேலதிக விபரங்களை அவர்கள் தற்போது வெளியிட்டு வருகின்றனர்.


கொரொட்-7பி (COROT-7b) என்று பெயரிட்டுள்ள இந்தக் கோள் நமது பூமியைக் காட்டிலும் ஐந்து மடங்கு எடையுள்ளது. இந்தளவு எடையுள்ள கோள் கட்டாயம் பாறைகளைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்று வானியலாளர்கள் நம்புகின்றனர். இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட கோள்களை விட நமது பூமியை அதிகம் ஒத்த கோள் இதுவே.


எமது சூரியக் குடும்பத்துக்கு அப்பால் அடையாளம் காணப்பட்டுள்ள கோள்கள் பொதுவாக மிகப்பெரியனவாக உள்ளதால் அவை பெரும்பாலும் எமது வியாழன் மற்றும் சனி கோள்கள் போன்று வளிமக் கோள்களாகவே காணப்படுகின்றன.


ஆனாலும் கொரொட்-7பி கோளில் வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் என்பதால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை அரிது.


இந்தக் கோள் தனது சூரியனில் இருந்து 2.5 மில்லியன் கிமீ தூரத்தில் மணிக்கு ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் சுற்றிவருகிறதாம். பூமி சூரியனை சுற்றும் வேகத்தை விட இது ஏழு மடங்கு அதிகம்.


கொரொட்-7பி கோளை 2009 பெப்ரவரியில் கொரொட் என்ற பிரெஞ்சு விண்கலம் கண்டுபிடித்தது. பூமியை ஒத்த பிற கோள்களைக் கண்டறிவதில் அடுத்த கட்டத்தை நாம் எட்டுகிறோம் என்பதை இந்தக் கண்டுபிடிப்பு காட்டுவதாக வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மூலம்

தொகு