பிலிப்பைன்சில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 140 பேர் உயிரிழப்பு
திங்கள், செப்டம்பர் 28, 2009, பிலிப்பைன்சு:
பிலிப்பைன்சில் ஏற்பட்ட பெருமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 140 பேர் இறந்துள்ளதாகவும் மேலும் 30 பேரைக் காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை மழை ஓய்ந்ததால் வெள்ளம் குறையத் தொங்கியது. இதனால் மீட்புப் பணிகள் தடையின்றித் தொடர்ந்தன.
மீட்கப்பட்டோரில் அறுபதாயிரம் பேர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் சிறுவர்களே அதிகமாகும். ஹெலிகொப்டர்கள், தோணிகளின் உதவியுடன் வெள்ளத்தில் தத்தளித் தோர் காப்பாற்றப்பட்டனர்.
வெள்ளம் முற்றாக வடிந்த பின்னரே சேத விபரங்களின் சரியான தகவல்களை அறிய முடியுமென மீட்புப் பணியாளர்கள் கூறினர். வெள்ளத்திலிருந்து தப்பும் பொருட்டு மக்கள் வீட்டுக் கூரைகளின் மேலும் உயரமான இடங்களிலும் ஏறிக் கொண்டனர்.
ஒன்பது மணித்தியாலங்களுக்கு இடைவிடாது மழை பெய்ததால் இருபது அடி உயரத்தில் வெள்ளம் நின்றது. பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலா உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. நாற்பது ஆண்டுகளின் பின்னர் இப்பெரு வெள்ளம் பிலிப்பைன்சைச் சேதப்படுத்தியது.
மக்களைப் பொறுமையாக இருக்கும்படி பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கோரியுள்ளதுடன், வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று இலட்சத்து முப்பதாயிரம் பேர் வரை வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளனர்.
மூலம்
தொகு- "வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் துரிதம்". தினகரன், செப்டம்பர் 29, 2009
- "Philippines Launches Massive Relief Operation After Flood". வொயிஸ் ஆஃப் அமெரிக்கா, செப்டம்பர் 28, 2009
- "140 die in Philippine storm, toll expected to rise". யாஹூ!, செப்டம்பர் 28, 2009
- "Philippines appeals for flood aid". அல்ஜசீரா, செப்டம்பர் 28, 2009