பிரெஞ்சு பயணிகள் விமானம் இந்திய வான்படை ஜெட் விமானத்தினால் வழிமறிக்கப்பட்டது
வெள்ளி, ஆகத்து 28, 2009
ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானம் ஒன்று வியாழன் அன்று தன்னை சரிவர அடையாளம் காட்டாததன் காரணமாக தம்மால் வழிமறிக்கப்பட்டதாக இந்திய வான்படையினர் (IAF) தெரிவித்தனர்.
பாரிசில் இருந்து பாங்கொக் நோக்கிப் புறப்பட்ட ஏர்பஸ்-ஏ340 ரக பயணிகள் விமானம் ஒன்றே இந்திய வான்படையின் மிக்-29 ஜெட் விமானத்தினால் வழிமறிக்கப்பட்டது. பிரெஞ்சு விமானம் பாகிஸ்தானில் இருந்து இந்திய வான்பரப்பினுள் நுழைய முற்பட்டது. அதன் விமானி "நட்பு விமானமா அல்லது எதிரி விமானமா" எனக் காட்டும் (IFF) குறியீட்டைத் தவறுதலாகப் பிழையான குறியீட்டைக் காட்டியிருந்தார்.
தனது தவறை உணர்ந்த விமானி சரியான குறியீட்டைக் காட்டியவுடன், போர் விமானம் தரைக்குத் திரும்புவதற்கு உத்தரவிடப்பட்டதாக வான்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"வியாழக்கிழமை காலை அம்ரித்சரின் தென்கிழக்கே இந்திய வான்படையின் றேடார் கருவி விமானம் ஒன்றின் பறப்பை அவதானித்தது. 37,000 அடி உயரத்தில் பறந்த அவ்விமானம் இந்திய வான்பரப்பில் நுழைந்தது. எனினும், அவ்விமானம் எவ்விதத் தகவல்களையும் அனுப்பவில்லை. அத்துடன் அதன் இரண்டாம்தர றேடார் பதிலுரை தவறாக இருந்தது. இதனால் அவ்விமானம் "அடையாளம் காட்டாத விமானம்" என அறிவிக்கப்பட்டது", என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
170 பேர் வரை கோல்லப்பட்ட 2008 மும்பை தாக்குதல்களை அடுத்து பாகிஸ்தானுடனான எல்லைப் பாதுகாப்பை இந்தியா வலுப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்
தொகு- Air France plane intercepted after emitting wrong signals, டைம்ஸ் ஆப் இந்தியா
- India intercepts Air France plane, பிபிசி