பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் தனது அச்சுப் பதிப்பை நிறுத்திக் கொண்டது

புதன், மார்ச்சு 14, 2012

244 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் தனது புகழ்பெற்ற 32-பாக கலைக்களஞ்சிய அச்சுப்பதிப்பை வெளியிடுவதை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.


பிரித்தானியா கலைக்களஞ்சியத் தொகுதி

விக்கிப்பீடியா போன்ற இணையக் கலைக்களஞ்சியங்களுடன் போட்டியாக இனிமேல் தனது எண்ணிம இணையக் கலைக்களஞ்சியத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்போவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. டாப்லெட் கணினிகளுக்கான கலைக்களஞ்சியத் தொகுதி ஒன்றை அண்மையில் இந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.


"அச்சில் வெளிவரும் கலைக்களஞ்சியங்களின் விற்பனை கடந்த பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கத்தக்க அளவாகக் குறைந்துள்ளது," என பிரித்தானிக்காவின் தலைவர் ஜோர்ஜ் கோசு தெரிவித்தார். இந்நிலை வரும் என நாங்கள் ஏற்கனவே தெரிந்திருந்தோம் என அவர் கூறினார். பல பத்திரிகைகள், வார இதழ்கள் மற்றும் நூல் பதிப்பாளர்கள் தமது பதிப்புகளை தற்போது இணையத்திலேயே பெருமளவு வெளியிடுகிறார்கள்.


சிறிய நேர இடைவெளியில் கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கத்தை அடிக்கடி மேம்படுத்தும் வசதி இணையத்தில் உள்ளது. ஆனால் அச்சுப் பதிப்பில் அப்படியல்ல. ஒரு முறை அச்சில் வெளியிட்டால் அது காலாவதியாகிவிடுகிறது, என பிரித்தானிக்கா கூறுகிறது.


பிரித்தானிக்கா என்சைக்கிளோப்பீடியா முதன் முதலில் எடின்பரோவில் ஆடம் மற்றும் சார்ல்சு பிளாக் என்பவர்களினால் 18 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பதிப்பிக்கப்பட்டது. பிந்திய பதிப்புக்கள் வழமையாக ஆட்சியிலிருந்த மன்னர்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டன. 1870களில், இதன் 19ம், 20ம் பதிப்புக்களின் போது இவ் வெளியீடு ஸ்கொட்லாந்திலிருந்து இலண்டனுக்கு மாற்றப்பட்டு த டைம்ஸ் என்னும் செய்திப் பத்திரிகையுடன் இணைக்கப்பட்டது. 11ம் பதிப்புக்குப் பின்னர், இதனுடைய வியாபாரச் சின்னமும், பதிப்புரிமையும் சியர்ஸ் ரோபக் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதுடன், சிகாகோவிற்கு மாற்றப்பட்டு அங்கேயே நிலைகொள்ளலாயிற்று.


மூலம் தொகு