படகில் சென்ற இலங்கை அகதிகள் கிறிஸ்மஸ் தீவுக் கடலில் கைது

திங்கள், சூலை 13, 2009 ஆஸ்திரேலியா:

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து பெறச் சென்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்கிய 73 இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அப்பால் வைத்து அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2009, ஜூலை 11 சனிக்கிழமை படகில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் விமானம் கிறிஸ்மஸ் தீவுக்கு அப்பால் 80 கடல் மைல் தூரத்தில் மீன்பிடிப்படகில் வந்த இவர்களை அவதானித்தது.

இந்தத் தகவல் அவுஸ்திரேலியக் கடற்படைக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியக் கடற்படையினர் அந்தப் படகை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவுக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் படகில் 73 பேர் இருந்தனர் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரண்டன் ஓ'கோனர் அறிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களை அடையாளம் காணும் பணியும் உடல் நிலையை சோதனை செய்யும் பணியும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் வழியில் கடந்த வாரம் மூழ்கியதாக கூறப்பட்ட படகே இப்போது பாதுகாப்பாக வந்துள்ளதாக தெரியவந்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ஸ்ரெப்பின் சிமித் தெரிவித்தார்.

படகில் இருந்த இருவருடன் அவுஸ்திரேலிய பொலிஸார் தொடர்பு கொண்டு பேசினர். எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை தாங்கள் அரசியல் தஞ்சம் கோரி வந்தவர்கள் என்றும் படகில் இருந்த இருவர் தொலைபேசியில் பொலிஸாருக்குத் தெரிவித்தனர்.

மூலம் தொகு