நிலவின் வடதுருவத்தில் பெருமளவு பனிக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டது

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வியாழன், மார்ச் 4, 2010


இந்தியாவின் சந்திரனுக்கான விண்கலப்பயணமான சந்திரயான் விண்கலத்தில் அனுப்பப்பட்ட நாசாவின் ஆய்வுக் கலம் சந்திரனில் தண்ணீர் இருப்பதை ஏற்கெனவே உறுதி செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நாசாவால் சந்திரயானில் அனுப்பபட்ட மற்றொரு விண் ஆய்வுக்கலம், தற்போது நிலவின் வடதுருவப் பிரதேசத்தில் ஏராளமான உறைபனி இருப்பதை உறுதி செய்திருக்கிறது.


டெக்சாசில் நடந்த விண்கோள் அறிவியல் மாநாட்டில் இந்த புதிய கண்டுபிடிப்பை அறிவித்த நாசா அறிவியலாளர்கள், நிலவின் வடதுருவத்தில் இருக்கும் மிகப்பெரும்பள்ளங்களில் நீராக இருந்து உறைபனியாக மாறிய உறை பனிப்படிமங்களை தங்களின் சமீபத்திய ஆய்வு கண்டறிந்திருப்பதாக அறிவித்தனர்.


நாசாவின் மினி-சார் என்ற பரிசோதனை பெருமளவு உறைபனியைக் கண்டறிந்திருக்கிறது. நிலவின் நீருடன் ஐதரோகார்பன் போன்ற வேறு மூலக்கூறுகளும் கலந்திருந்ததையும் இப்பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.


சில பள்ளங்களில் இருக்கும் உறைபனிப்பாறைகள் இரண்டு முதல் 15 கிலோமீட்டர் விட்டம் கொண்டதாக இருப்பதாகவும், இந்த பனிப்பாறைகளின் அடர்த்தி என்பது பல மீட்டர்களாக இருக்கக்கூடும் என்றும் வானியலாளர்கள் கணித்திருக்கிறார்கள்.


இந்த உறைபனியின் மொத்த அளவு குறைந்தது 600 மில்லியன் மெட்ரிக் தொன்களாக இருக்கும் என்று கூறிய ஹூஸ்டனில் இருக்கும் நிலவு மற்றும் விண்கோள் ஆய்வு மையத்தைச்சேர்ந்த முனைவர் பால் ஸ்புடிஸ், இந்த உறைபனியில் இருக்கும் நீரின் மூலக்கூறுகளை ராக்கெட்டுக்கான எரிபொருளாக பயன்படுத்தினால், பூமிக்கும் நிலவுக்கும் இடையில் 2200 ஆண்டுகளுக்கு தினமும் ஒரு விண்ஓடத்தை இயக்க முடியும் என்றும் கூறினார்.


இத்தகைய பெருமளவான உறைபனி நிலவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் மூலம், நிலவுக்குள் இருக்கும் இயற்கை வளங்களைக் கொண்டு மனிதன் தொடர்ந்து அங்கே வசிப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மூலம்

தொகு