தெற்கு சூடானிய மக்கள் அச்சத்தினால் வடக்கில் இருந்து வெளியேற்றம்

வெள்ளி, நவம்பர் 12, 2010

தெற்கு சூடானில் அடுத்த ஆண்டு சனவரியில் இடம்பெறவிருக்கும் சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்பு குறித்த அச்சத்தினால் வடக்கில் வாழும் ஆயிரக்கணக்கான தெற்கு சூடானிய மக்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


தெற்கு சூடான்

வடக்கில் இருந்து வெளியேறுபவர்களுக்கான வசதிகளை தெற்கு சூடானிய அரசு செய்து வருகிறது. அவர்களைத் தெற்குக்குக் கொண்டு வருவதற்கு போக்குவரத்து ஏற்பாடுகளையும் அது செய்து வருகிறது. 5,000 பேர் வரையில் இதுவரையில் தென்பகுதிக்குத் திரும்புவதற்குப் பதிவு செய்துள்ளார்கள்.


தெற்கு சூடான் தனியாகப் பிரிந்து போனால் வடக்கில் வாழும் தெற்கு சூடானிய மக்கள் அங்கு வரவேற்கப்பட மாட்டார்கள் என வடக்கின் அதிகாரிகள் பலர் தெரிவித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


ஆப்பிரிக்காவின் மிகப்பெரும் நாடாகிய சூடானில் 21 ஆண்டு கால இனப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு 2005 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின் படி அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கிறது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு, கிறித்தவர்கள் மற்றும் வேறு மதங்களைச் சார்தவர்களைக் கொண்ட தெற்கு என நாடு இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.


இவ்வளவு பெருமளவு மக்கள் திரும்புவதை ஒட்டி ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் பரோனெசு வலேரி ஏமொஸ் கவலை தெரிவித்தார். "பலர் தமது வேலைகளை விட்டு இங்கு வருகிறார்கள். இவர்கள் தெற்கில் வேலையில்லாமல் இருக்கப் போகிறார்கள்."


"பலர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு பிரிவினைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறார்கள்," என அவர் தெரிவித்தார்.


மூலம் தொகு