தார்பூர் பிராந்திய ஆணையம் அமைக்க சூடான் முடிவு

வியாழன், பெப்பிரவரி 9, 2012

சூடானின் தார்பூர் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் போரினால் அழிந்திருக்கும் பகுதிகளைன் வளர்ச்சியை முன்னெடுப்பதற்காக ஆணையம் ஒன்றை சூடான் அரசுத்தலைவர் அமைத்திருக்கிறார்.


சூடானில் தார்பூர் பிராந்தியம்

கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரினால் பாதிப்புற்றோருக்கு உதவவும், போரினால் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றுவதற்கும் இந்தப் புதிய பிராந்திய ஆணையம் உதவும் எனக் கூறப்படுகிறது. இதற்கான உடன்பாடு சூடான் அரசுக்கும், தார்பூரின் வலுகுன்றியிருக்கும் போராளிக் குழு ஒன்றுக்கும் இடையில் எட்டப்பட்டது. ஏனைய போராளிக் குழுக்கள் இவ்வுடன்பாட்டை ஏற்க மறுத்திருக்கின்றன.


கடந்த ஆண்டு தோஹா உடன்படிக்கையில் கையெழுத்திட்ட விடுதலை மற்றும் நீதிக்கான இயக்கத்தின் (LJM) உறுப்பினர்களை சிறைகளில் இருந்து விடுவிப்பதாக நேற்றைய நிகழ்வில் அல்-பஷீர் அறிவித்தார். ஆனாலும், உடன்படிக்கையில் கையெழுத்திடாத ஏனைய இயக்கங்களுக்கு இந்தச் சலுகை காட்டப்படமாடாதென அவர் அறிவித்தார். எல்ஜேஎம் குழுவின் தலைவர் திஜானி சேசே தார்பூர் பிராந்திய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தார்பூர் போரினால் இரண்டு மில்லியன் மக்கள் வரை தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர். 300,000 பேர் வரையில் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது.


தார்பூரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்காக சூடானின் அதிபர் ஓமர்-அல்-பசீர் உட்பட பல அதிகாரிகளுக்கு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அழைப்பாணையைப் பிறப்பித்திருந்தது.


2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தார்பூரில் போர்ச்சூழல் மிகவும் குறைந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். தார்பூரின் மிகவும் வலு வாய்ந்த நீதிக்கும் சமத்துவத்துவத்துக்குமான இயக்கம் என்ற போராளிக் குழுவின் தலைவர் காலில் இப்ராகிம் கடந்த ஆண்டு திசம்பரில் கொல்லப்பட்டார்.


மூலம் தொகு