தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ!
செவ்வாய், சூலை 14, 2009; திண்டுக்கல், தமிழ்நாடு:
அரிய வகை மூலிகைகளையும், மரங்களையும் திருடும் கும்பல் வைத்த தீயால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ளது.
இந்த தீயில் சிக்கி அரிய வகை மரங்களும், மூலிகைச் செடிகளும் கருகிப் போய் வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணையை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விலை உயர்ந்த மரங்களும் அரியவகை மூலிகைச் செடிகளும் ஏராளமாக உள்ளன.
மேலும் இந்த அடர்ந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, பன்றி, கரடி, முயல் போன்ற வன விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியில் நுழைந்த ஒரு கும்பல் மரம் வெட்டி கடத்தும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதற்கு வசதியாக மரங்களுக்கு தீ வைத்து விடுகிறது.
எரிந்த நிலையில் இருக்கும் மரங்களை எளிதாக வெட்டி கடத்தி விடுகிறார்கள். நேற்றும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மரங்களுக்கு தீ வைத்தனர்.
இதனால் வன விலங்குகள் அழிந்து வருவதுடன் அவை உயிர் தப்பிப்பதற்காக அங்கிருந்து இடம் பெயர்ந்து அருகில் உள்ள மலைக் கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.
குறிப்பாக தீ விபத்து ஏற்பட்டுள்ள வனப்பகுதிக்கு அருகிலுள்ள மல்லையாபுரம், பாறைப்பட்டி, ஆத்தூர் போன்ற கிராமங்களுக்கு சென்று விடுகின்றன.
நேற்றிரவு காட்டுப் பன்றிகளும், காட்டு மாடுகளும் பழனி-செம்பட்டி சாலையில் உள்ள கோழிப்பண்ணை என்ற இடத்தைக் கடந்து சென்றன. இதனால் அப்பகுதியில் வாழும் பொது மக்கள் பெரும் பீதியிலும், அச்சத்திலும் உள்ளனர்.
தொடர்ந்து எரிந்து வரும் தீயால் வனப்பகுதியில் வளர்ந்துள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் அழிந்து வருகின்றன.
மரம் கடத்தும் கும்பலால் அடிக்கடி ஏற்படும் தீ விபத்து குறித்து பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் புகார் கூறப்படுகின்றது.
திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க போராடினார்கள்.
ஆனால் கொளுந்து விட்டு எரிந்த தீயை அவர்களால் நெருங்க கூட முடியவில்லை.
சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ எரிவதால் மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக் கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.