டைனசோருக்கு முந்தைய கால விலங்குகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

வெள்ளி, மார்ச்சு 5, 2010


இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட டைனசோர்களை விட 10 மில்லியன் ஆண்டுகள் பழமையான விலங்கினங்களின் எலும்புகளைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.


அசிலிசரஸ் கொங்குவி (Asilisaurus kongwe) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விலங்கினங்கள் 245 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


இவர்களின் கண்டுபிடிப்புகள் நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ஸ்டேர்லிங் நெஸ்பிட் என்பவரின் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


தான்சானியாவில் இந்த புதைபடிவ எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


"சைலசோர் (silesaurs) எனப்படும் இவ்வகை விலங்கினங்கள் டைனசோர்களின் மிக நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த அவற்றின் மூதாதைகள்," என இவ்வாய்வில் பங்குகொண்ட முனைவர் ரண்டல் ஏர்மிஸ் என்பவர் தெரிவித்தார்.


டைனோசர் பரம்பரையின் ஆரம்பக்கட்டங்கள் குறித்து மீள ஆய்வுநடத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்த புதிய கண்டுபடிப்புகள் தம்மை தள்ளியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


"டைனசோர் பரம்பரையின் ஒரு கிளையை மட்டுமே இப்போது கண்டுபிடித்துள்ளோம். இரண்டாவது கிளையும் இதே காலப்பகுதியில் இருந்திருக்க வேண்டும். எனவே இப்பரம்பரையில் ஆரம்பகால டைனசோர்கள் இன்னும் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது" என ஏர்மிஸ் தெரிவித்தார்.

மூலம்