ஜனாதிபதி தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வுக்கான திட்டம்-மகிந்த
திங்கள், சூலை 6, 2009: இலங்கை
இலங்கை இனப்பிரச்சினைக்கான தமது தீர்வுத்திட்டம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்னரே வரும் என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சமஷ்டி தீர்வுக்கு இலங்கையில் இடம் கிடையாது என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், தனது அரசியல் தீர்வுத்திட்டமான, ‘’13 வது அரசியல் யாப்புத் திருத்தத்தை சற்று மேம்படுத்திய திட்டம்’’ குறித்து பேசியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், தனது மனதில் ஒரு தீர்வுத்திட்டம் இருப்பதாகவும், ஆயினும், அது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தை விவாதித்து பெற வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தான் இவற்றுக்காக காத்திருப்பதாக கூறியுள்ள ஜனாதிபதி, இருந்தபோதிலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் தேர்வு செய்யப்பட்ட பின்னரே அது வரும் என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை, எதனை கொடுக்க வேண்டும், எதனைக் கொடுக்கக் கூடாது என்று தனக்கு தெரியும் என்றும், மக்கள் தனக்கு அதற்கான ஆணையை தந்திருப்பதாகவும், அதனை தான் பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை தான் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் உடன்பாட்டுக்காக காத்திருப்பதாக, கூறியுள்ள ஜனாதிபதி, அவர்களுக்கு எது கிடைக்கக் கூடியதாக இருக்கும், எது கிடைக்காது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியிருப்பதுடன், இலங்கையில் சமஸ்டி முறைமைக்கு இடமில்லை, அனைத்து சமூகமும் ஒன்றித்த வகையில் வாழக்கூடிய ஒரு தீர்வு முறைமையே முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.